வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (08/10/2018)

கடைசி தொடர்பு:22:30 (08/10/2018)

`உங்கள் நெற்றியில் இருப்பது தமிழக வரைபடம்தானே?!’ - ஹெய்டனைக் கலாய்த்த ஜான்டி ரோட்ஸ்

ஆஸ்திரேலிய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ  ஹெய்டன். சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து கடந்த 2009 -ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பின்னர் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். ஓய்வு நேரங்களில் கடலில் விளையாடுவதுதான் ஹெய்டனுக்கு பிடித்த விஷயம். பெரும்பாலான நேரம் இவர் தனது குடும்பத்தினருடன் கடலில் விளையாடும் அலைசறுக்கு விளையாட்டில்தான் செலவழிப்பார். 

ஹெய்டன்

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள நார்த் ஸ்ட்ராட்ப்ரோக் தீவில், தனது மகனுடன் அலை சறுக்கு விளையாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர், விபத்தில் சிக்கினார். தொடர்ச்சியாக வந்த ராட்சஸ அலைகளில் சிக்கிய ஹெய்டன், வேகமாக மணல்திட்டின் மீது வீசப்பட்டார். இதில், அவரது கழுத்துப்பகுதி, முதுகு மற்றும் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. முதுகு மற்றும் கழுத்துப் பகுதிகளில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். 

தற்போது சிகிச்சைப் பெற்று வரும் ஹெய்டன் உள்ளூர் பத்திரிகை ஒன்று பேட்டி அளித்துள்ளார். அதில்,``நான் இப்போது இருக்கும் நிலைக்கு அதிர்ஷ்டம்தான் காரணம் என்று சொல்லுவேன். அன்று நாங்கள் விளையாடத் தொடங்கி ஒரு மணிநேரம் இருக்கும். பல அலைகள் தொடர்ச்சியாக வந்தது. அதில் சிக்கியதுவரை தான் நினைவில் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 

ஜாண்டி

ஐ.பி.எல் தொடக்க சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஹெய்டன் விளையாடியுள்ளார். இதனால் அவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம். மேலும், டி.என்.பி.எல் தொடரிலும் அவர் வர்னணையாளராக தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு பயணித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் போஸ்டுக்குப் பெரும்பாலும் கமெண்ட் போட்டவர்கள் நம் தமிழ் மக்கள்தான். இந்நிலையில், இந்தியாவை அதிகம் நேசிக்கும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ், ஹெய்டனின் இந்தப் பதிவில் தனது வைரல் கருத்தைப் பதிவு செய்துள்ளார். ``ஹெய்டன், உங்கள் நெற்றியில் இருப்பது. தமிழகக் கடற்கரையின் வரைபடம்தானே. உங்களின் ஈடுபாட்டைப் பாராட்டுகிறேன். எங்களைப் போன்று இலகுவான மனம் படைத்தவர்கள் எங்கள் பாசத்தை டாட்டூவாக வரைந்து மட்டுமே காட்டுவோம்’’ என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். இந்த கமெண்ட் செம்ம வைரல். அவரது நெற்றியில் உள்ள காயம் தமிழகக் கடற்கரையின் வரைபடம் போலத்தான் இருக்கானு கமெண்ட்ல சொல்லுங்க மக்களே..!