வெளியிடப்பட்ட நேரம்: 11:37 (09/10/2018)

கடைசி தொடர்பு:11:37 (09/10/2018)

இளையோர் ஒலிம்பிக்! பளு தூக்குதலில் தங்கம் வென்றார் இந்திய வீரர் ஜெரிமி

இளையோர் ஒலிம்பிக் போட்டியில், பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீரர் ஜெரிமி லால்ரின்னுன்கா, இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.  

பளு தூக்குதல்

அர்ஜென்டினாவின் ப்யூனோஸ் ஏர்ஸ் நகரில், இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இன்று நடைபெற்ற பளுதூக்குதல் போட்டியில், 15 வயதான இந்தியாவின் ஜெரிமி லால்ரின்னுன்கா, 62 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார். ஸ்னாட்ச்சில் (snatch) 124 கிலோவும், கிளீன் அண்டு ஜெர்க்கில் 150 கிலோவும் என மொத்தம் 274 கிலோ எடையைத் தூக்கி, இந்தப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இது, இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பெற்ற முதல் தங்கமாகும். ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு வரை 273 கிலோ தான் அவரின் பெஸ்ட்டாக இருந்தது.  இந்த ஆண்டில், அவர் 251 கிலோ வரை தூக்கி பயிற்சிபெற்றிருக்கிறார். இப்போது தூக்கிய 274 கிலோ, அவரின் பெர்சனல் பெஸ்ட்டாக அமைந்தது.

இது, இந்த ஆண்டு இவர் பெற்ற மூன்றாவது பதக்கமாகும். அதற்கு முன்பு, யூத் ஆசியப் போட்டியில் வெள்ளியும், ஜூனியர் ஆசியப் போட்டியில் வெண்கலமும் வென்றார். போட்டிக்குப் பின்னர் பேசிய ஜெரிமி, "என்னுடைய வலிமை பல சீனியர் வீரர்களோடு போட்டியிடும் அளவுக்கு இருக்கிறது. அதை நான் பொருட்படுத்தவில்லை. சீனியர் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வரை என் பயிற்சி ஓயாது" என  தெரிவித்துள்ளார். இளையோர் ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா 1 தங்கம் 3 வெள்ளியுடன், பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறது.