வெளியிடப்பட்ட நேரம்: 14:23 (09/10/2018)

கடைசி தொடர்பு:15:16 (09/10/2018)

ஹாரிஸ் சோஹைல் முதல் டெஸ்ட் சதம்... பாகிஸ்தான் அசத்தல் ஆட்டம்! #PakVsAus

பாகிஸ்தான் அணி வீரர்களின் பேட்டிங்கை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் திணறினர்.

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதும்  இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில்  டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தது.  பாகிஸ்தான் வீரர்களின் அதிரடி பேட்டிங்கால், முதல் இன்னிங்ஸில் 482 ரன்கள் எடுத்தது.


பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள்  இமாம்-உல்-ஹக் (76), முகமது ஹஃபீஸ் (126) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் நாள் இறுதியில், 3 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 255 ரன்கள் குவித்தது. 


போட்டியின்  இரண்டாவது நாளில், ஹாரிஸ் சோஹெயிலின் சதத்தால், அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் முதல் சதம்.   8 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசிய ஹாரிஸ், 110 ரன்கள் எடுத்தார்.   டெஸ்ட் போட்டிகளில் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த  சொஹெயில் - அசாத் சபீக் கூட்டணி,  பாக்,. அணியின் ஸ்கோரை 410 ரன்களுக்கு எடுத்துச் சென்றது. பாகிஸ்தான் அணி வீரர்களின் பேட்டிங்கை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் திணறினர். 

பாகிஸ்தான்  ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்


ஸ்கோரை கட்டுக்குள் வைக்க முயன்ற ஆஸ்திரேலிய அணி, 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்தது. 6-வது விக்கெட் முதல் பாகிஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், முதல் இன்னிங்ஸ் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி, 482 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்தவரை, பீட்டர் சிடில் 3 விக்கெட்டுகளையும்,  நாத்தன் லாய்டு 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.


அதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கியது. 13 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், விக்கெட் இழப்பு ஏதுமின்றி 30/0 என்ற நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிந்தது. பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான  டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நாளான இன்று, 35 ஓவர்கள் முடிவில், 117/0 என்ற நிலையில் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது.