வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (10/10/2018)

கடைசி தொடர்பு:07:00 (10/10/2018)

`ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கு முன்பும் இதைக் கட்டாயம் செய்யுங்கள்!’ - டிராவிட்டின் அட்வைஸ்

டெஸ்ட் தொடர்களில் இந்தியா சிறப்பாக விளையாட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் சில யோசனைகளை வழங்கியுள்ளார். 

டிராவிட்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய இந்திய ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்  `தி வீக்’ பத்திரிகைக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் இந்திய அணியில் செயல்பாடு தொடர்பாகவும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவது தொடர்பாகவும் பேசியுள்ளார். 

``டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட தொடர்ச்சியான பயிற்சிகள் தேவை. தற்போது ஒருநாள்  மற்றும் டி20 தொடர்கள் அதிகம் விளையாடுவதால், வெள்ளைப் பந்துகளில் அதிகம் விளையாட வாய்ப்புகள் கிடைக்கிறது. ஆனால், சிவப்பு நிறப் பந்துகளில் குறைந்த அளவிலானப் போட்டிகளில்தான் விளையாடுகிறார்கள். சிவப்பு நிறப் பந்துகளைச் சிறப்பாக எதிர்கொண்டு விளையாடும் இளம் வீரர்களும் இருக்கிறார்கள். 

நான், முதல் தர கிரிக்கெட் போட்டிகளால்தான் அதிகம் பயனடைந்தேன். டெஸ்ட் போட்டிகளில் என்னுடைய செயல்பாடுக்கு முதல்தர போட்டிகள் முக்கிய காரணம். எந்த ஒரு டெஸ்ட் தொடருக்கு முன்னரும் இரண்டு முதல்தர டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடினால், அது பயனளிக்கக்கூடியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உள்ளூர் போட்டி அட்டவணைகளை, அதற்குத் தகுந்தபடி மாற்ற வேண்டும். வீரர்கள், வரும் காலங்களில் கடினமாகச் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். தொடர்ந்து சிறப்பாக விளையாடினாலும் அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலை வரலாம். கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக விளையாட வேண்டியது கட்டாயம். கடந்த கால செயல்பாடுகளைக் காட்டிலும் நிகழ்காலத்தில், அவர்களின் விளையாட்டு எப்படி என்பது தான் முக்கியம்.

பேட்டிங்கைப் பொறுத்தவரை, பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தில் விளையாட வேண்டும். தற்போது வீரர்கள் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்துவதால், குறைவான அளவிலேயே டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறார்கள். தற்போது இங்கிலாந்துக்கு விளையாட வந்துள்ள இந்திய ஏ அணியில் உள்ள வீரர்கள், கடந்த 6, 7 மாதங்களாகச் சிவப்பு நிறப்பந்தில் விளையாடவே இல்லை. இதுபோன்று நடக்கவே கூடாது” என்றார்.