வெளியிடப்பட்ட நேரம்: 06:10 (10/10/2018)

கடைசி தொடர்பு:07:37 (10/10/2018)

இளையோர் ஒலிம்பிக் போட்டி - துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு முதல் தங்கம்!

இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த மனு பாகர் தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.

இளையோர் ஒலிம்பிக்


கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. அர்ஜென்டினாவின் ப்யூனோஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டிகள், 18-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 4000 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பில் 69 பேர் 13 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற 10  மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில்,  16 வயதான மனு பாகர்  தங்கப்பதக்கம் வென்றார்.    

அவர், 236.5 புள்ளிகள் பெற்று, பட்டியலில் முதலிடம் பெற்றார். இதையடுத்து, 235.9 புள்ளிகள் பெற்ற ரஷ்யாவின் இயானா இனினா வெள்ளிப்பதக்கமும், நினோ குட்சிபெர்ட்ஸே வெண்கலப் பதக்கமும் வென்றனர். இந்த வெற்றிகுறித்து மனு பாகர்,``ஆசிய விளையாட்டுப் போட்டியில் தோல்வியடைந்தேன். அது எனக்கு நல்ல பாடத்தைக் கற்றுத்தந்தது. அதன்பிறகு நான் மேற்கொண்ட கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது. அதிகப் புள்ளிகள் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார். இந்தியாவுக்குக் கிடைக்கும் முதல் தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.