வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (11/10/2018)

கடைசி தொடர்பு:13:45 (11/10/2018)

20 நிமிடத்தில் பவன் குமார் 3 சூப்பர் ரெய்ட்... தமிழ்த் தலைவாஸ் `ஹாட்ரிக்’ தோல்வி!

20 நிமிடத்தில் பவன் குமார் 3 சூப்பர் ரெய்ட்... தமிழ்த் தலைவாஸ் `ஹாட்ரிக்’ தோல்வி!

ப்ரோ கபடி லீக் போட்டியின் 4 வது நாளில் மூன்றாவது தோல்வியைச் சந்தித்தது தமிழ்த் தலைவாஸ். தொடர்ந்து 2 போட்டிகளில் தோற்றதால் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அவுட் ஆஃப் ஃபார்ம் காரணமாக ஜஸ்வீர் சிங் வெளியே உட்கார வைக்கப்பட்டார். மேட்ச் தொடங்கியதும் தமிழ்த் தலைவாஸ் கேப்டன் அஜய் தாகூரை மடக்கி பெங்களூர் புல்ஸ் முதல் புள்ளியை எடுத்தது. தமிழ்த் தலைவாஸ் அணியில் ரெய்டர் அதுல் முதல் புள்ளியைப் பெற்றுத் தந்தார். 

பெங்களூரு அணியில் எப்போதும் கலக்கும் கேப்டன் ரோஹித் குமாரை விட இந்த முறை இளம் வீரர் பவன்குமார் ஷெராவத் தமிழ்த் தலைவாஸ் டிபன்டர்களைச் சிதற விட்டார். ஆட்டத்தின் 4 வது நிமிடத்திலேயே கார்னரில் மஞ்சீத் சில்லரின் பிடியில் நழுவி அமித் ஹூடா வை ஏமாற்றி 3 புள்ளிகள் பெற்று சூப்பர் ரெய்டாக்கி மிரட்டினார். இருந்தாலும் தொடக்கத்தில் ஆட்டம் சரிசமமாகத்தான் சென்றுகொண்டிருந்தது. 9-11 என இருந்த ஆட்டத்தின் 13 வது நிமிடத்தில் ரெய்டுக்குச் சென்ற கேப்டன் அஜய் தாகூர் கிடைத்த நல்ல வாய்ப்பை வீணடித்தார். வெறும் 2 டிபண்டர்களிடம் சூப்பர் டேக்கிளில் சிக்கிஅவுட்டாக ஆட்டம் அப்படியே பெங்களூர் பக்கம் திரும்பியது.

பவன் குமார் vs தமிழ் தலைவாஸ்

பெங்களூரு அணியில் காசிலிங் அடாகே, பவன் ஷெராவத்திடம் இருந்த ஃபார்ம் அஜய் தாகூர், அதுலிடம் வெளிப்படவில்லை. முதல் பாதியின் கடைசி 4 நிமிடங்களில் நடந்த இரு ரெய்டுகளில்தான் ஆட்டம் பெங்களூரு புல்ஸ் பக்கம் முழுமையாகத் திரும்பியது. 11-17 என இருந்தபோது ரெய்டுக்குச் சென்ற அஜய் தாகூர் டிபண்டர்கள் மகேந்தர் சிங் ஆசிஷின் பிடியில் சிக்கி அவுட் ஆக்க, இந்தமுறை ரெய்டுக்குச் சென்ற பவன் மஞ்சீத்தின் ஆங்கில் ஹோல்டில் தப்பித்து அதுல் அருண் அமித் என அத்தனை பேரின் பிடியில் சிக்காமல் கோட்டைத் தொட்டு 5 புள்ளிகளை எடுத்து அதிர வைத்தார். அமித் ஹூடா கைகளைப் பிடித்து நடக்காமல் கழுத்தைச் சுற்றி வளைக்க நினைத்ததால் 5 புள்ளிகளை தாரைவார்க்கக் காரணமானது. இதனால் ஆல் அவுட் ஆன தமிழ்த் தலைவாஸ் அணிக்கு மீண்டும் ஒரு செக் வைத்துத் தெறிக்க விட்டார் பவன்.

கடந்த 3 மேட்ச்களில் செய்த அதே தவற்றை மீண்டும் மீண்டும் தமிழ்த் தலைவாஸ் டிபண்டர்கள் டேக்கிளில் செய்தனர். கார்னர் பொசிசனில் இருக்கும் மஞ்சீத் சில்லர், அமித் ஹூடா அரைகுறையாக ரெய்டரைப் பிடிப்பது, சரியான ஐடியா இல்லாமல் அவசரகதியில் சென்டர் பொசிசனில் ஆடும் தர்சனும் அருணும் ஒருசேர அவுட் ஆவது எனத் தொடர்ந்ததால் முதல் பாதி முடியவிருக்கும் கடைசி 4 நொடிகளில் பவன் மீண்டும் டுப்கி அடித்து 4 புள்ளிகளை எடுத்து 3 வது சூப்பர் ரெய்டாக்கினார். இதனால் 12-28 எனத் தமிழ்த் தலைவாஸ் அணி தடுமாறியது. முதல் பாதியிலேயே பெங்களூரு புல்ஸ் வீரர் பவன் ஷெராவத் ரெய்டில் மட்டும் 17 பாய்ன்ட் எடுத்து தனிஒருவனாகக் கெத்துக் காட்டினார். ப்ரோ கபடி வரலாற்றில் ஃபர்ஸ்ட் ஆப் முடிவதற்கு முன்பே 3 சூப்பர் ரெய்டு எடுத்த முதல் வீரர் இவர்தான்!

பவன் குமார்

இரண்டாம் பாதியில் எப்போதும் வெகுண்டெழுந்து வெற்றிக் கோட்டை நெருங்கும் நம் அணியின் ஆட்டம் இந்த முறை பெங்களூரு புல்ஸிடம் செல்லுபடியாகவில்லை. இரண்டாம் பாதியில் மஞ்சீத்துக்கு பதிலாக சுனில் இறங்கினார். திடீரென பவன் காயமடைந்ததால் அஜய் தாகூர் அதுல் இணை இந்த முறை விரைவில் போனஸ் எடுத்து டேக்கிலில் பார்த்துக் கொள்ளலாம் என ரெய்டுக்குச் சென்று கொண்டே இருந்தனர். ஆனால், தமிழ்த் தலைவாஸ் அணியின் திட்டத்தைத் தவிடு பொடி ஆக்கியது பெங்களூரு புல்ஸ் அணியின் டிபன்ஸ். ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் அஜய் தாகூர் எடுத்த இரு புள்ளிகள்தாம் தமிழ்த் தலைவாஸ் அணி ஒரே ரெய்டில் எடுத்த அதிகபட்சப் புள்ளிகள். கேப்டன் அஜய் தாகூர் இந்த முறை 20 ரெய்டுகளுக்கு மேல் சென்றுதான் சூப்பர் 10 எடுக்க முடிந்தது. ஆனால், பெங்களூரு புல்ஸ் வீரர் பவன் ஷெராவத் 15 ரெய்டுகளிலேயே 20 புள்ளிகள் எடுத்துக் கலக்கினார்.

தமிழ்த் தலைவாஸ் அணி கடைசி 10 நிமிடங்களில்தாம் சுறுசுறுப்பாகப் புள்ளிகளை எடுத்து, ஒருமுறை பெங்களூரு அணியை ஆல் அவுட் செய்தது. இறுதியில் 37-48 எனத்  தமிழ்த் தலைவாஸ் ஹாட்ரிக் தோல்வியைச் சந்தித்தது. தமிழ்த் தலைவாஸ் அணியில் ரெய்டிங் யூனிட்டில் அனுபவ வீரர்கள் சுர்ஜீத் நர்வால், சுகேஷ் ஹெக்டே காயத்தால் வெளியே இருப்பது மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது. இதனால் அஜய் தாக்கூருக்கு பிரஷரை அதிகமாக்கி ஆட்டத்தின் திறனைப் பாதிக்கிறது. இதேபோல் ரைட் கார்னர் அமித் ஹூடா சொதப்பிக் கொண்டே இருப்பதால் வேறு வீரர்களுக்கு வாய்ப்புக் கொடுக்காமல் அஜய் தாகூர் படை நாளுக்கு நாள் திணறிக்கொண்டே இருக்கிறது. 

U Mumba vs Jaipur Pink Panthers

முன்னதாக நடைபெற்ற யூ மும்பா - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இடையிலான ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் பாதியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ஆதிக்கம் செலுத்தியதால் 15-13 என முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் யூ மும்பா டிபண்டர் ஃபசல் அட்ரசலியும் ரெய்டர் சித்தார்த் தேசாயும் இணைந்து பட்டையைக் கிளப்பினார்கள். மோஹித் சில்லார், அனூப் குமாரை எல்லாம் ஏமாற்றி சித்தார்த் தேசாய் புள்ளிகளை அள்ளினார். கடைசி 4 நிமிடங்கள் இருக்கும்போது நிதின் சூப்பர் டேக்கிலிலும், கேப்டன் அனுப் குமார் ஃபசல் சுரேந்தர் சிங் இணையிடமும் அவுட் ஆக, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆட்டம் யூ மும்பா பக்கம் திரும்பியது. இறுதியில் 39-32 என யூ மும்பை அணி வெற்றி பெற்றது.


டிரெண்டிங் @ விகடன்