வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (11/10/2018)

கடைசி தொடர்பு:17:30 (11/10/2018)

`ஒரு ரன்கூட எடுக்காத 8 பேர்; 11 பந்துகளில் தோல்வி!’ - டி20 போட்டியில் சீனாவுக்குத் தொடரும் சோகம்

உலகக் கோப்பை டி20 தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் சீனாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேபாளம் வீழ்த்தியது. 

சந்தீப் லமிச்சன்

File Photo

உலகக் கோப்பை டி20 தொடருக்கான ஆசிய அளவிலான தகுதிச் சுற்றுப் போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரின் லீக் சுற்றுப் போட்டியில் சீனா - நேபாளம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த சீனா, 13 ஓவர்களில் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சீனா தரப்பில் தொடக்க வீரர் யான் ஹோங்ஜியாங் அதிகபட்சமாக 11 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்தபடியாக உதிரிகள் வாயிலாக 9 ரன்கள் கிடைத்ததே அதிகம். சீன வீரர்கள் 8 பேர் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. நேபாளம் தரப்பில் ஐ.பி.எல் தொடரில் விளையாடிய சந்தீப் லமிச்சான் 4 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 27 ரன்கள் இலக்கை நேபாளம் அணி, 11 பந்துகளில் எட்டியது. இதில் தொடக்க வீரர் பினோத் பண்டாரி 24 ரன்கள் குவித்தார். சீனாவில் டியான் சென் குன் வீசிய முதல் ஓவரில் 21 ரன்களை நேபாளம் அணி குவித்தது. 

இந்தத் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் சீனா, சிங்கப்பூர் அணிக்கெதிரான போட்டியிலும் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதேபோல், தாய்லாந்து, பூடான் மற்றும் மியான்மர் அணிகளுக்கெதிரான போட்டிகளில் முறையே 35, 45, 48 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. மக்கள் தொகையில் உலக அளவில் முதலிடத்தில் இருக்கும் சீனா, கிரிக்கெட் உலகில் இதுவரை பெரிய அளவில் சாதிக்கவில்லை.