வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (11/10/2018)

கடைசி தொடர்பு:20:20 (11/10/2018)

`நெருக்கடி கொடுக்காதீர்கள்!’ - ப்ரித்வி ஷாவுக்காகக் குரல் கொடுக்கும் விராட் கோலி

திறமை வாய்ந்த வீரருக்கு அழுத்தம் தரக் கூடாது. அவருக்கான ‘ப்ரீ ஸ்பேஸ்’ கொடுக்க வேண்டும் என்று கோலி கோரிக்கை

`நெருக்கடி கொடுக்காதீர்கள்!’ - ப்ரித்வி ஷாவுக்காகக் குரல் கொடுக்கும் விராட் கோலி

ந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட்  போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கிய ப்ரித்வி ஷா, அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 

18 வயதான இளம் வீரர் ப்ரித்வி ஷாவின் அதிரடி ஆட்டத்தைப் பலரும் பாராட்டி வருவதுடன், முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சேவாக், சச்சின் ஆகியோரின் ஆட்டத்திறனுடன் ஒப்பிட்டு வருகின்றனர். இதற்கு, ஒரு தரப்பில் ஆதரவும், மற்றொரு தரப்பில் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கோலி


நாளை இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில், கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். ப்ரித்வி ஷாவின் சாதனையும், மற்ற வீரர்களுடனான ஒப்பீடும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால், கேப்டன் கோலி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.  ``இளம் வீரர் ப்ரித்வி ஷா சிறப்பான ஆட்டத்திறனைப் பெற்றுள்ளார். திறமை வாய்ந்த வீரருக்கு நெருக்கடி தரக் கூடாது. அவருக்கான ‘ஃப்ரீ ஸ்பேஸ்’ கொடுக்க வேண்டும். போட்டியின் எந்த நிலையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறன் அவரிடம் உள்ளது. ப்ரித்வியின் சாதனையைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல், U-19 போன்ற தொடர்களில் பங்கேற்பதினால் கிடைக்கும் அனுபவம், சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியாய் உள்ளதாகவும், எவருடனும் ப்ரித்வி ஷாவை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது என்றும் கோலி அழுத்தமாக கோரிக்கை வைத்துள்ளார். ஹைதராபாத்தில் நாளை நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், வெஸ்ட் இண்டீஸ் உடனான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றும்!