வெளியிடப்பட்ட நேரம்: 13:04 (12/10/2018)

கடைசி தொடர்பு:13:22 (12/10/2018)

தத்தளிக்கும் தமிழ் தலைவாஸ்... சொந்த மண்ணில் சொதப்பல் ரெக்கார்டு! #ProKabaddi

தத்தளிக்கும் தமிழ் தலைவாஸ்... சொந்த மண்ணில் சொதப்பல் ரெக்கார்டு!  #ProKabaddi

ப்ரோ கபடி (#Pro Kabaddi) லீக் சென்னைச் சுற்றின் கடைசி நாளான நேற்றும் தோல்வியடைந்து, முதல் சீசனைப் போலவே மோசமான நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது தமிழ் தலைவாஸ். முதலில் ரெய்டுக்குச் சென்ற ஜஸ்வீர் ரன்னிங் `ஹேண்ட் டச்'சில் ஒரு புள்ளி எடுத்தார். பெங்கால் அணியில் மணிந்தர் சிங் முதல் ரெய்டிலேயே அமித் ஹூடாவின் ஈட்டிப் பிடியில் ஜம்ப் அடித்து 2 புள்ளிகள் எடுத்தார். முதல் 10 நிமிட ஆட்டத்தில் அரங்கமே அதிர்ந்தது. பெங்கால் ரெய்டர் ஜாங் குன் லி கார்னர் டிபண்டரை ஏறி கிக் விட்டு, பாயின்ட் எடுக்கும்போது மற்ற டிபண்டர்கள் பிடிக்காமல் இருக்கும்போதே தமிழ் தலைவாஸ் அணியின் டிபண்டிங் தடுமாற்றம் ஆரம்பமானது.

Pro Kabaddi

தமிழ் தலைவாஸ் ஒவ்வொரு புள்ளி எடுக்கும்போதும் ரசிகர்களின் ஆரவாரத்தில் நேரு ஸ்டேடியமே அதிர்ந்தது. ஆனால், இந்த ஆரவாரம் அடுத்த நிமிடங்களிலேயே அடங்கிவிடும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஜஸ்வீரும் அஜய் தாகூரும் ரெய்டில் தொடர்ச்சியாக பாயின்ட் எடுக்க, 13-வது நிமிடத்தில் பெங்கால் வாரியர்ஸ் ஆல் அவுட் ஆகப் போகிறது என நினைத்திருந்த அத்தனை பேருக்கும் ஏமாற்றமாகத்தான் இருந்திருக்கும். ஒரேயொரு பிளேயர் இருக்கும்போது மாற்று வீரராக ரெய்டுக்கு வந்த ரோஹித் நர்வாலை, மஞ்சீத் சில்லர் அரைகுறையாக மடக்க, பின்னால் டேக்கில் செய்ய வந்த அதுல், ஜஸ்வீர் இருவரையும் ஏமாற்றி காலால் கோட்டைத் தொட்டு சூப்பர் ரெய்டாக மாறினார். இதனால், பெங்கால் வாரியர்ஸ் முன்னிலை பெற்றது. இந்த ஒரு தவறுதான் தமிழ் தலைவாஸ் அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது.

கபடியில் எப்போதும் எதிரணியின் சமநிலையை உடைத்தால் அதை இறுதிவரை செயல்படுத்த வேண்டும். ஆனால், ஆல் அவுட் செய்யப் போகிறோம் என்கிற ஆர்வக்கோளாறில், அவசரகதி டேக்கிளில் ஒட்டுமொத்த அணிக்கும் வந்தது வினை. முதல் பாதியில் பெங்கால் கேப்டன் சுர்ஜீத் சிங், ராண் சிங் இருவரும் அடிக்கடி தவறு செய்தனர். மனிந்தர் சிங், மகேஷ் கவுடாவின் ரெய்டில் முதல் பாதியின் கடைசி ரெய்டில் 15-18 என தமிழ் தலைவாஸ் ஆல் அவுட்டானது. முதல் பாதியில் இரு அணிகளும் ரெய்டில் தலா 11 புள்ளிகள், டேக்கிலில் 3 புள்ளிகள் மட்டுமே எடுத்தன. 

Pro Kabaddi

இறுதி நாளின் இரண்டாம் பாதியிலாவது தமிழ் தலைவாஸ் சொந்த மண்ணில் ஒரு வெற்றியைப் பெற்றுத் தருவார்கள் என நம்பிக்கை கொண்டிருந்த ரசிகர்களுக்கு எப்போதும் போல் ஏமாற்றமே கிடைத்தது. ரெய்டரைச் சரியாக வெளியே தள்ளாமல் விடுவது, தானாகவே லாபியில் காலை வைப்பது என டிபண்டர்கள், கடந்த மேட்ச்களில் செய்த தவறுகளை செய்ய ஆரம்பித்தார்கள். 25, 26-வது நிமிடங்களில் பெங்கால் ரெய்டர் மகேஷ் கௌடா அமித் ஹூடா மற்றும் சுனிலின் கால் பிடியில் ஜம்ப் அடித்து 2 பாயின்ட் எடுத்து மெய்சிலிர்க்க வைத்தார். இதனால் தமிழ் தலைவாஸ் மீண்டும் ஆல்அவுட். கடைசி 10 நிமிடங்களில் பெங்கால் கார்னர் ராண் சிங்கின் ஆங்கில் ஹோல்டில் அதுல் சிக்க, அஜய் தாகூர் தானாகவே லாபியை மிதித்து அவுட் ஆக, தமிழ் தலைவாஸ் டிபண்டர் அமித் ஹூடா மணிந்தர் சிங்கின் ரெய்டில் வெளியேற, 9 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் 4 வது தோல்வியைச் சந்தித்தது. சொந்த மண்ணில் இதுவரை இரு சீசன்களில் தமிழ் தலைவாஸ் 11 போட்டிகளில் வெறும் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளதுதான் பெரும் சோகம்.

Pro Kabaddi

முன்னதாக நடைபெற்ற ரெய்டு மெஷின் பர்தீப் நர்வால் தலைமையிலான பாட்னா பைரேட்ஸ் -The Most accuracy ரெய்டர் ரிஷாங்க் தேவாடிகாவின் யூபி யோத்தா அணிகள் ஆட்டம் வேற லெவலில் இருந்தது. ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில்தான் பர்தீப் பாயின்ட் எடுக்க ஆரம்பித்தார். அடுத்த 4 நிமிடங்களிலேயே யூபி யோத்தா ஆல் அவுட். ஆனால், அடுத்த ரெய்டில் ரிஷான்க் 3 டிபண்டா்களை முட்டித் தள்ளி சூப்பர் ரெய்டாக்கினார். அடுத்து ஸ்ரீகாந்த் ஜாதவின் ஸ்மார்ட்டாக, இரு புள்ளிகளை அள்ளிவர, பாட்னா பைரேட்ஸ் ஆல் அவுட் ஆனது.

Pro Kabaddi

முதல் பாதியில் இரு அணிகளும் சரிசமமாக மல்லுக்கட்டியதால் 21-20 என பாட்னா பைரேட்ஸ் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியிலும் `நீயா நானா’ ஆட்டம் தொடர்ந்தது. கடைசி இரு நிமிடத்தில் இரு அணிகளும் தலா ஒரு டெக்னிக்கல் பாயின்ட் இழக்க, 42-41 என இருந்தது. கடைசி ரெய்டில் ஒரு பாயின்ட் எடுத்தால் டிரா என ரெய்டு செய்த ஸ்ரீகாந்த் ஜாதவ் எல்லைக்கோடு வரை வந்தும் டேக்கில் ஆனதால் 43-41 என பாட்னா பைரேட்ஸ் அணி இந்த சீசனின் முதல் வெற்றியைப் பெற்றது.