வெளியிடப்பட்ட நேரம்: 17:11 (12/10/2018)

கடைசி தொடர்பு:17:11 (12/10/2018)

‘உமேஷ் வேகம்; குல்தீப் சுழல்; டாப் ஆர்டர் காலி’ - மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் மீண்டது மே.இ.தீவுகள்  #INDvWI

இந்திய அணிக்கு எதிரான 2 -வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 295 ரன்கள் எடுத்துள்ளது. 

மேற்குஇந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி

Photo Credit: BCCI

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த நிலையில், இன்று காலை இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற  மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். 

இந்திய அணியில் உமேஷ் யாதவ் மற்றும் அறிமுக வீரர் ஷ்ரதுல் தாக்கூர் ஆகியோர் பந்துவீச்சைத் தொடங்கினர். 10 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் ஷ்ரதுல் தாக்கூர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இதனால் தொடக்கத்திலே அஷ்வின் பந்துவீச வந்தார். தொடக்க ஆட்டகாரர் பிராத்வைத் மற்றும் பவல் நிதானமான தொடக்கம் அளித்தனர். 22 ரன்கள் எடுத்த நிலையில் பவல், அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

உமேஷ் யாதவ்

Photo Credit: BCCI

இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்தினர். அஷ்வின் கட்டுக்கோப்பாக பந்துவீச, குல்தீப் யாதவ் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஒரு கட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 113 ரன்னுக்கு 5 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. இந்தமுறையும் 200 ரன்னுக்குள் மேற்கிந்திய தீவுகள் அணி சுருண்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோஸ்டன் சேஸ், டவ்ரிச் இணை சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியது. இந்த நிலையில்,  உமேஷ் யாதவ் பந்துவீச்சில் 30 ரன்னில் ஆட்டமிழந்தார் டவ்ரிச். 

அதன்பின்னர் சேஸுடன் இணைந்தார் கேப்டன் ஹோல்டர். ரோஸ்டன் ஹோல்டர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ஹோல்டரும் அரைசதம் அடித்தார். ஆனால், அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. ஹோல்டர் 52 ரன்கள் எடுத்த நிலையில், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் சேஸ்

இறுதியாக முதல் நாள் முடிவில் 95 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்துள்ளது. சேஸ் 98 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அஷ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஒரு கட்டத்தில் 200 ரன்களைத் தாண்டுவதே சிரமம் என்ற நிலையிலிருந்து 300 ரன்கள் என்ற நிலைக்கு மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது மேற்கிந்திய தீவுகள் அணியின் நடுவரிசை.