நெதர்லாந்தில் பாஸ்போர்ட்டைத் தொலைத்த பேட்மின்டன் வீரர் காஷ்யப்! | Shuttler Parupalli Kashyap loses passport in Amsterdam

வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (13/10/2018)

கடைசி தொடர்பு:16:07 (13/10/2018)

நெதர்லாந்தில் பாஸ்போர்ட்டைத் தொலைத்த பேட்மின்டன் வீரர் காஷ்யப்!

நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில், இந்திய பேட்மின்டன் வீரர் காஷ்யப், தனது பாஸ்போர்ட்டைத் தொலைத்திருக்கிறார். இந்த விவகாரத்தில் தலையிட்டு உதவுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். 

காஷ்யப்

உலக அளவிலான பேட்மின்டன் போட்டிகளில் கலக்கிவரும் காஷ்யப், டென்மார்க் ஓப்பன் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக ஒடேன்ஸ் நகருக்குச் சென்றார். நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் சென்றடைந்த அவர், தனது பாஸ்போர்ட்டை நேற்றிரவு பறிகொடுத்திருக்கிறார். டென்மார்க் ஓப்பன் போட்டிகளில் கலந்துகொள்ள ஒடேன்ஸ் நகருக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட இருக்கும் நிலையில், பாஸ்போர்ட் மாயமானதால், ஆம்ஸ்டர்டாம் நகரில் அவர் சிக்கித் தவிக்கிறார். 

இந்தத் தகவலைத் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள காஷ்யப், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் உதவி கோரியிருக்கிறார். மேலும், அந்த ட்வீட்டில் பிரதமர் மோடி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன்சிங் ரதோர் ஆகியோரையும் அவர் டேக் செய்துள்ளார். 

காஷ்யப்பின் ட்வீட்டுக்கு பதிலளித்த நெதர்லாந்துக்கான இந்தியத் தூதர் வேணு ராஜாமணி, தி ஹேக் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு உடனடியாக வருமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், தூதரகத்தின் தொடர்பு எண்ணையும் குறிப்பிட்டு அவர், காஷ்யப்புக்கு ட்விட்டரில் பதிலளித்திருக்கிறார். அந்தப் பதிவுக்கு காஷ்யப்பும் பதிலளித்திருப்பதால், விரைவில் அவருக்கு உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

காஷ்யப் ட்வீட்

இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் நட்சத்திரமான காஷ்யப், சக வீராங்கனையான சாய்னா நேவாலை வரும் டிசம்பர் மாதம் கரம்பிடிக்க இருக்கிறார். அவர்கள் இருவரும் காதலித்துவருவதாக வெளியான தகவல்களை உறுதிப்படுத்திய அந்த ஜோடி, வரும் டிசம்பர் மாதம் 16-ம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றவர் காஷ்யப் என்பது குறிப்பிடத்தக்கது.  

 


[X] Close

[X] Close