வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (13/10/2018)

கடைசி தொடர்பு:18:16 (13/10/2018)

`5-வது விக்கெட்டுக்கு 146 ரன்கள்!’ - வெஸ்ட் இண்டீஸின் ஸ்கோரை நெருங்கிய இந்தியா #INDvWI

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 -வது டெஸ்ட்  போட்டியில், இந்திய அணி 308 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. 

உமேஷ் யாதவ்

Photo Credit: Twitter/BCCI

வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா அபாரமாக இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த நிலையில், நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற  வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர், முதலில் பேட்டிங் செய்ய முடிவுசெய்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்தது. 

இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்  சேஸ் சதமடித்தார்.  மறுபுறம், இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கடைசி விக்கெட்டுகளைச் சாய்த்தார். இன்று காலை 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை  இழந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. இறுதியில், அந்த அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சேஸ் 106 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகள் சாய்த்தார். இது, டெஸ்ட் போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சாகும். 

அதன்பின் தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கியது இந்திய அணி. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல் ராகுல், இந்த முறையும் சொதப்பினார். கடந்த ஆட்டத்தில் டக் அவுட் ஆன ராகுல், இந்தமுறை 4 ரன்களில் ஆட்டமிழந்தார். ப்ரித்வி ஷா இந்த முறையும் தனது அசத்தல் ஃபார்மை தொடர்ந்தார். மோசமான பந்துகளைத் தொடர்ச்சியாக பவுண்டரிகளாக மாற்றினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய புஜாரா, 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர், கேப்டன் கோலி களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய ப்ரித்வி ஷா, அரை சதம் அடித்தார். 53 பந்துகளில் 70 ரன்கள் எடுத்த நிலையில், ப்ரித்வி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கோலி 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது, இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்திருந்தது. 

பண்ட் ரஹானே ஜோடி

Photo Credit: Twitter/BCCI

அதன்பின்னர், இக்கட்டான நிலையில் இணைந்த ரஹானே-பண்ட் இணை, சிறப்பாக விளையாடியது. குறிப்பாக, பண்ட் அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு விருந்தளித்தார். அடுத்தடுத்த பந்துகளில் ரஹானே மற்றும் பண்ட் அரை சதம் அடித்தனர். அதன் பின்னர் இருவரும் ரன்ரேட்டை மேலும்  உயர்த்தினர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 81 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது. பண்ட் 85 ரன்களுடனும், ரஹானே 75 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 5-வது விக்கெட்டுக்கு இந்த இணை 146 ரன்கள் சேர்த்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கேப்டன் ஹோல்டர் 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்திய அணி தற்போது, வெஸ்ட் இண்டீஸ் அணியை விட 3 ரன்கள் பின்தங்கியுள்ளது.