வெளியிடப்பட்ட நேரம்: 19:57 (13/10/2018)

கடைசி தொடர்பு:19:57 (13/10/2018)

`கால்பந்திலும் கலக்கும் உசைன் போல்ட்!' - க்ளப் போட்டியில் 2 கோல்கள் அடித்து அசத்தல்

உசைன் போல்ட். விளையாட்டு குறித்து அதிகம் அறிமுகம் இல்லாதவர்களும் இவர் குறித்த அறிமுகம் தேவையில்லை. ஜமைக்காவின் புயலான இவருக்கும் உலகம் முழுவதிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். 8 முறை ஒலிம்பிக் சாம்பியனான இவர் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்துள்ளார். அவர் ஒரு தடகள வீரர் என்பதைத் தாண்டி, தனது நகைச்சுவையான செய்கைகள் மூலமும் தனக்கே உரிய  கொண்டாட்டங்கள் மூலமும் ரசிகர்களை அதிகம் ஈர்ப்பவர். 

போல்ட்

பல கோடி ரசிகர்களை உலகம் முழுவதும் கொண்டுள்ள போல்ட், கடந்த 2017 -ம் ஆண்டி தடகள போட்டிகளில் ஒருந்து ஓய்வு பெற்றார். அவருக்குச் சிறுவயது முதலே கால்பந்து விளையாட வேண்டும் என்பது ஆசை. தடகளத்தில் இருந்து ஓய்வு பெற்றதும் அதற்கான வேலைகளில் இறங்கினார். ஆஸ்திரேலியாலில் உள்ள  உள்ளூர் கால்பந்து க்ளப் ஆன சென்ட்ரல் கேஸ்ட் மரினர்ஸ் அணியில் இணைந்து பயிற்சி பெற முடிவு செய்தார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த அணியில் இணைந்து கடும் பயிற்சிகள் மேற்கொண்டார்.
 
இந்நிலையில் நேற்று சென்ட்ரல் கேஸ்ட் மரினர்ஸ் அணி,  மகார்துர் சவுத் வெஸ்ட் அணியுடன் நட்பு ரீதியிலான போட்டி ஒன்றில் மோதியது. இந்தப் போட்டியில் சென்ட்ரல் கேஸ்ட் மரினர்ஸ் அணிக்காக உசைன் போல்ட் களமிறங்கினார். தொழில்முறையாக கால்பந்துவிளையாடும் வீரர்களுடன் இணைந்து முன்களத்தில் மின்னல் வேகத்தில் விளையாடினார் போல்ட். ஆட்டத்தின் தொடக்கத்தில் அவர் மிகவும் தடுமாறினார். தனது முதல் பாஸை வெற்றிகரமாக முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டார்.  இரண்டாவது பாதியில் அவர், சற்று பிடிப்புடன் விளையாடியதாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இறுதியில் சென்ட்ரல் கேஸ்ட் மரினர்ஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி  பெற்றது. இந்தப்போட்டியில் போல்ட்  இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். கோல் அடித்ததும் தனது ஸ்டைலில் அதனைக் கொண்டாடி மகிழ்ந்தார் போல்ட். 

உசைன்

இந்தப்போட்டிக்குறித்து பேசிய அவர்,  ``கடின உழைப்பு மூலம் கனவு நிறைவேறியுள்ளது. கால்பந்து வாழ்க்கையின் தொடக்கத்தில் 2 கோல்கள் அடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. எனது விளையாட்டில் முன்னேற்றம் கண்டுள்ளேன். அது மகிழ்ச்சி. என்னால் முடிந்த வரை சிறப்பாக விளையாடி அணியில் இடம்பிடிக்கப் போராடுவேன்” என்றார். ஆஸ்திரேலியன் -ஏ சீரீஸ் வரும் 19 -ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சென்ட்ரல் கேஸ்ட் மரினர்ஸ் அணி போல்ட் அணிக்குத் தேர்வு செய்யப்படுவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.