வெளியிடப்பட்ட நேரம்: 09:16 (14/10/2018)

கடைசி தொடர்பு:09:16 (14/10/2018)

‘அணியில் குழப்பத்தை ஏற்படுத்த தோனி விரும்பமாட்டார்!’- ஜார்க்கண்ட் பயிற்சியாளர் ராஜீவ் குமார்

விஜய் ஹசாரே டிராபியில் ஜார்க்கண்ட் அணிக்காக தோனி விளையாட மறுத்துள்ளது தேசியத் தேர்வுக்குழுவினரை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தோனி - ஜார்க்கண்ட்

இந்தியக்கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடரில், ஜார்க்கண்ட் அணிக்காக காலிறுதிப்போட்டில் விளையாடுவார் எனத் தேசிய தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியாகியும் தோனியிடம் இருந்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை என ஜார்கண்ட் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் மூலம் தேர்வுக் குழுவினருக்கும் மூத்த வீரர்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்பதும் மூத்த வீரர்களே தங்களது முடிவுகளை எடுத்துக்கொள்கின்றனர் என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஜார்கண்ட் அணியின் பயிற்சியாளர் ராஜீவ் குமார், “தேசிய தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், தோனி காலிறுதிப்போட்டியில் விளையாடுவார் என அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை தோனியிடம் இருந்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை. என்னுடைய பார்வையில், ஒரு போட்டியில் விளையாடுவதற்காக அணியில் குழப்பத்தை ஏற்படுத்த தோனி விரும்பமாட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம்பெற்றுள்ள தோனி அதுகுறித்த தகவல் தெரிவிக்க அக்டோபர் 16-ஆம் தேதி ஹைதராபாத் செல்கிறார். தோனியின் முடிவு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. ” என்றார்.

 ஜார்க்கண்ட் அணி சிறந்த வீரர்களுடன் களமிறங்கியுள்ளது. அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். தனது பங்களிப்பு இன்றியே காலிறுதி வரை சென்றுள்ளது. அணியின் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்த தோனி விரும்பவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் பேட்டிங்கில் தோனியின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை. பேட்டிங்கில் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.நடப்பாண்டில் வெறும் 22 நாட்கள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். 15 ஒருநாள், 7 டி20 போட்டிகளில் களமிறங்கியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.