வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (14/10/2018)

கடைசி தொடர்பு:07:36 (15/10/2018)

`உள்ளூர்ல சிங்கம்லா!' - ஆஸ்திரேலியா சாதனையைச் சமன் செய்த இந்தியா #INDvWI

இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. 

இந்தியா அணி கேப்டன் கோலி

Photo Credit: Twitter/BCCI

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, 367 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பண்ட் 92 ரன்கள் எடுத்தார். 
பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்துத் தடுமாறியது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. அபாரமாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜடேஜா 3 விக்கெட்டுகளும் அஷ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணிக்கு 72 ரன்களை வெற்றி இலக்காக வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்தது.

அதன் பின்னர் தனது 2-வது இன்னிங்ஸை ஆட களமிறங்கியது இந்திய அணி. தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய  ப்ரித்வி ஷா  -ராகுல் ஜோடி அதிரடியாகவும், அதே நேரத்தில் விக்கெட்டைப் பறிகொடுக்காமலும் நேர்த்தியாக விளையாடியது. இறுதியில் 16.1 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. முதல் போட்டியைப் போன்று இந்தப்போட்டியும் மூன்றாவது நாளிலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக முதன்முறையாக டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வீத்திய உமேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடரில் அறிமுக வீரராக களமிறங்கி, ஒரு சதம், மற்றும் அரை சதம் விளாசிய ப்ரித்வி ஷா தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடர் வெற்றி மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிகத் தொடர்களை வென்ற அணிகள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் சாதனையை இந்திய அணி சமன் செய்தது. இந்திய அணி, கடந்த 2012-13 சீசனிலிருந்து தற்போது வரை தொடர்ச்சியாக 10 தொடர்களில் வென்றுள்ளது. இந்தச் சாதனையை ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை படைத்திருக்கிறது. 1994-95 சீசனிலிருந்து 2000-01 சீசன் வரை முதல் முறையும், 2004-ம் ஆண்டு முதல் 2008-09 சீசன் வரை இரண்டாவது முறையும் அந்த அணி சாதனை படைத்திருந்தது.