வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (14/10/2018)

கடைசி தொடர்பு:07:54 (15/10/2018)

`தொடர்ச்சியாக டாஸில் தோல்வி' - டுபிளஸிஸ் எடுத்த சுவாரஸ்ய முடிவுக்குக் கிடைத்த வெற்றி! #FafduPlessis

ஜிம்பாப்வே அணி தற்போது தென்னாப்பிரிக்கா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என தென்னாப்பிரிக்கா அணி கைப்பற்றியது.  தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. 

டுபிளஸிஸ்

தென்னாப்பிரிக்க அணிக்கு கேப்டனாக டுபிளஸிஸ் செயல்பட்டு வருகிறார். கடந்த மார்ச் -ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டி முதல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த முடிந்த ஒருநாள் தொடர் வரையில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் டாஸை இழந்துள்ளார் டுபிளஸிஸ். இதனால் ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் புதிய பிளானுடன் வந்தார் அவர். டாஸ் போடுவதற்கு உடன் சக வீரர் ஜே.பி டுமினியை அழைத்து வந்தார். 

டாஸ் போடுவதற்காக காயினை கையில் வாங்கிய டுபிளஸிஸ், அதனை டுமினியிடம் கொடுத்தார். டுமினி டாஸ் போடும்போது டுபிளஸிஸ் வேறுதிசையில் திரும்பிக்கொண்டார்.  டுமினி டாஸ் போட, டுபிளஸிஸ் பிளான் சக்சஸ் ஆனது. ஆம், ஒருவழியாக தென்னாப்பிரிக்கா டாஸ் வென்றது. இவரின் இந்தச் செய்கை வைரல் ஆனது. இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள டுபிளஸிஸ் , ``விளையாட்டாக சில விஷயங்கள் செய்வது எனக்குப் பிடிக்கும், அதுவும் குறிப்பாக டி20 போட்டிகளில். இதோ என்னுடன் காயின் டாஸ்ஸர் (Coin Tosser) டுமினி உள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், போட்டி முடிந்த பின்னர் பேசிய டுபிளஸிஸ்,  ``ஒரு கேப்டனாக எனது பலம் மட்டுமல்ல, பலவீனத்தையும் தெரிந்துவைத்துக் கொள்வது அவசியம். அதனால், டுமினியை உடன் அழைத்து வந்தேன்” என்றார் நகைச்சுவையாக...