வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (15/10/2018)

கடைசி தொடர்பு:11:50 (15/10/2018)

`உங்களது போதை வார்த்தைக்கு மதிப்பில்லை!’- மெஸ்ஸியை விமர்சித்த மரடோனாவுக்கு பதிலடி

`மெஸ்ஸி ஒரு சிறந்த வீரராக இல்லை' எனக் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மரடோனாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மரடோனா

அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் மரடோனா சமீபத்தில் அளித்த பேட்டியில் லயோனல் மெஸ்ஸி குறித்து காட்டமாகப் பேசியிருந்தார். அதில், ``மைதானத்தில் மெஸ்ஸி ஒரு சிறந்த வீரராக இல்லை. அவரை கால்பந்து கடவுளாக கருதக்கூடாது. பார்சிலோனா அணிக்காக விளையாடும் போது அவர் மெஸ்ஸியாக இருக்கிறார். அர்ஜென்டினா அணிக்காக விளையாடும்போது வேறொரு மெஸ்ஸியாக இருக்கிறார். மெஸ்ஸி என்ற பெயர் பொறித்த டி-சர்ட் தான் அவரை அடையாளம் காட்டுகிறது. அவர் சிறந்த வீரர்தான்; ஆனால், தலைவர் அல்ல. போட்டிக்கு முன்பாக 20 முறை கழிவறை செல்பவர் ஒரு தலைவர் அல்ல. நான் பயிற்சியாளராக இருந்தால் மெஸ்ஸியை மீண்டும் அணியில் சேர்க்க மாட்டேன்” என்றார்.

மரடோனாவின் இந்தப் பேச்சை கால்பந்து ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ``போதை பழக்கத்துக்கு அடிமையானவரிடமிருந்து வரும் விமர்சனத்துக்கு எந்த மதிப்பும் இல்லை. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நபர் மெஸ்ஸியை விமர்சிக்க வேண்டியதில்லை'' எனக் கால்பந்து வட்டாரத்தைச் சேர்ந்த சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், மரடோனாவின் குற்றச்சாட்டை எளிதில் கடந்துவிட முடியாது. கிளப் போட்டிகளில் அசத்தும் மெஸ்ஸி, தனது நாட்டுக்காக ஆடும் போது தடுமாறுகிறார். நீலம் மற்றும் வெள்ளை நிற டீ- சர்ட்டில் மெஸ்ஸி தன்னை நிரூபிக்கவில்லை. தனது நாட்டுக்காக உலகக்கோப்பை வென்று தரவில்லை என்பதுதான் நிதர்சனம்.