வெளியிடப்பட்ட நேரம்: 20:31 (15/10/2018)

கடைசி தொடர்பு:20:35 (15/10/2018)

`ரோஹித் ஷர்மாவைக் கட்டிப்பிடித்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ரசிகர்!’ - வைரல் வீடியோ

விஜய் ஹசாரே கோப்பைத் தொடரின் காலிறுதிப் போட்டியில் ரோஹித் ஷர்மாவைக் கட்டிப்பிடித்த மகிழ்ச்சியில் துள்ளிக் குத்தித்த அவர் ரசிகரின் வீடியோதான் இன்றைய வைரல்.

ரோகித் ஷர்மா

நாடு முழுவதும் உள்ளூர் ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 19-ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தற்போது, முக்கிய கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில் இனி அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் மட்டும்தான் மீதம் உள்ளன. 

பெங்களூர் மைதானத்தில் மும்பை - பீகார் அணிகள் மோதிய காலிறுதிப் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் பீகார் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றது. இதில், மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்தார். அரையிறுதியில் மும்பை அணி ஜார்க்கண்ட் அணியை எதிர்கொள்கிறது. 

இந்தப் போட்டியின்போது ரோஹித் ஷர்மா களமிறங்கி பேட் செய்துகொண்டிருந்தார். அப்போது, மைதானத்தில் இருந்த ரோஹித் ஷர்மாவின் ரசிகர் ஒருவர், பாதுகாப்புக் கெடுபிடிகளை மீறி களத்துக்குள் புகுந்து, அவரின் காலைத் தொட்டுக் கும்பிட்டார். அதன் பின்னர், அவரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கவும் முயன்றார். அதன் பின்னர், ரசிகர்கள் அமரும் கேலரிக்குத் திரும்பிய அந்த இளைஞர், உற்சாகத்தில் துள்ளிக் குதித்தபடியே சென்றார். உற்சாக மிகுதியில் அவர் துள்ளிகுதித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலியின் ரசிகர் ஒருவர் மைதான பாதுகாப்பைத் தாண்டி அவருக்கு முத்தமிட மைதானத்துக்குள் ஓடி வந்தது குறிப்பிடத்தக்கது.