வெளியிடப்பட்ட நேரம்: 06:31 (16/10/2018)

கடைசி தொடர்பு:08:16 (16/10/2018)

`சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை' - ஜெயசூர்யா மீது பாய்ந்த ஐ.சி.சி!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி வீரருமான சனத் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. 

ஜெயசூர்யா

photo credit:@icc

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்ட ஜெயசூர்யா, தான் விளையாடிய காலத்தில் உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். இலங்கை அணி கடந்த 1996-ல் உலகக் கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றிய ஜெயசூர்யா, அந்த அணிக்காக 110 டெஸ்ட், 445 ஒருநாள் போட்டிகள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 14 சதங்கள், 31 அரைசதங்களுடன், முச்சதம் அடித்த இலங்கை வீரர் எனப் பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார். இப்படி பல்வேறு சாதனைகளைப் படைத்த அவருக்கு இது போதாத காலம் போல. சமீபத்தில் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. 

அதாவது, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின் இலங்கைக் கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு பதவிகளை வகித்து வந்த ஜெயசூர்யா தேர்வுக்குழுத் தலைவராகவும் பதவி வகித்தார். இந்தக் காலகட்டத்தில் வீரர்களைத் தேர்வு செய்ததில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் புகார் தொடர்பாக ஐ.சி.சி விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் அடுத்தகட்டமாக ஜெயசூர்யா மீது திடீரென இரண்டு பிரிவுகளில் வழக்குகளை ஐ.சி.சி பதிவு செய்துள்ளது. சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை மற்றும் ஆவணங்களை அழித்தது என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் அவருக்கு ஐ.சி.சி உத்தரவிட்டுள்ளது. இது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க