வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (16/10/2018)

கடைசி தொடர்பு:09:20 (16/10/2018)

``அவர் முன்னாடி அப்படி விளையாடியதுதான் ஸ்பெஷல்” - 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசிய ஆப்கான் வீரர் நெகிழ்ச்சி

ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் காபூல் அணி வீரர் ஹஸரத்துல்லா சாசாய் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

ஹஸரத்துல்லா சாசாய்

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரைப் போன்று ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் என்னும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 5-ம் தேதி தொடங்கிய இந்தத் தொடரில் 5 அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற போட்டியில் பால்க் லெஜண்ட்ஸ் அணியும், காபூல் அணியும் மோதியது. 

இதில் முதலில் பேட் செய்த பால்க் அணி 20 ஓவர்கள் முடிவில் 244 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கெயில் 80 ரன்கள் குவித்தார். பின்னர் இமாலய இலக்கை நோக்கிக் களமிறங்கிய காபூல் அணியின்  ஹஸரத்துல்லா சாசாய் ருத்ர தாண்டவம் ஆடினார். அப்துல்லா மசாரி என்பவரது பந்துவீச்சில் 6 பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்க விட்டு மாயாஜாலம் காண்பித்தார். அந்த ஓவரில் வீசப்பட்ட ஒரு வைடு பந்தையும் சேர்த்து மொத்தம் 37 ரன்கள் காபூல் அணிக்கு கிடைத்தது. 

அதிரடியாக விளையாடிய சாசாய், 12 பந்துகளில் அரைசதம் அடித்து கெயில், யுவராஜ் சாதனைகளைச் சமன் செய்தார். 7 சிக்ஸர்களும் 4 பவுண்டரிகளும் பறக்கவிட்ட அவர் 17 பந்துகளில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.  இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

கெயில்

Photo Credit: Twitter/ESPN

இந்த அதிரடியான ஆட்டம் குறித்துப் பேசிய சாசாய்,  ``எனது நாயகன் (கெயில்) முன்னிலையில் நான் அப்படி விளையாடியதை ஒரு கனவு தருணம் என்றுதான் சொல்ல வேண்டும். யாரிடமும் என்னை நிரூபிக்க வேண்டும் என்பதுக்காக நான் அப்படி விளையாடவில்லை. எனது இயல்பான ஆட்டத்தைதான் வெளிப்படுத்தினேன்.. கிரிக்கெட் உலகின் முக்கிய வீரர்களின் பெயர்களுடன் எனது பெயரும் இடம்பெறும் என்பது பெருமையான தருணம். 12 பந்துகளில் அரைசதம் அடித்ததுக்குக் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்” என்றார்.