வெளியிடப்பட்ட நேரம்: 20:51 (16/10/2018)

கடைசி தொடர்பு:08:36 (17/10/2018)

என்ன தவறு செய்தார் ஜெயசூர்யா... ஐ.சி.சி வழக்கு பதிவு செய்தது ஏன்?

இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்-ரவுண்டருமான சனத் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி ஊழல் புகார் பதிவு செய்துள்ளது.

என்ன தவறு செய்தார் ஜெயசூர்யா... ஐ.சி.சி வழக்கு பதிவு செய்தது ஏன்?

லங்கை கிரிக்கெட் அணிக்கு இது போதாத காலம். டெஸ்ட் கிரிக்கெட்டில் 6-வது இடம், ஒருநாள் போட்டிகளில் 8-வது இடம், டி20-ல் 9-வது இடம் எனத் தரவரிசையில் பின்தங்கி இருக்கிறது. இந்தச் சூழலில், மேலும் ஒரு சோதனையாக இலங்கை முன்னாள் கேப்டனும் ஆல்-ரவுண்டருமான சனத் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி ஊழல் புகார் பதிவு செய்துள்ளது. ஊழல் தடுப்பு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, விசாரணை சார்ந்த முக்கிய ஆவணங்களை அழித்தது போன்ற பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊழல் புகார்

2011-ம் ஆண்டில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஜெயசூர்யா, 2015-ம் ஆண்டு முதல் 2017 வரை இலங்கை கிரிக்கெட் அணி தேர்வுக்குழுத் தலைவராகப் பதவிவகித்தார். ஜெயசூர்யா பொறுப்பில் இருந்த இரண்டு வருடங்கள், இலங்கை கிரிக்கெட் அணி தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

2017 ஜிம்பாப்வே - இலங்கை அணிகள் பங்கேற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 3-2 என்ற கணக்கில் ஜிம்பாப்வேயிடம் இலங்கை தோல்வியடைந்தது. இந்தத் தொடருக்கான இலங்கை அணியைத் தேர்வு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக ஐ.சி.சி-க்கு சந்தேகம்  எழுந்தது. இலங்கை அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்யும் தலைமைப் பொறுப்பில் இருந்த ஜெயசூர்யா மீது வழக்கு தொடரப்பட்டது.

ஜெயசூர்யா

இதுகுறித்து விசாரணை நடத்திய ஊழல் தடுப்பு பிரிவினர், ஜெயசூர்யா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில், ஊழல் வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு ஜெயசூர்யா விளக்கமாகப் பதில் அளிக்கவில்லை என்ற குற்றம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, ‘பர்சனல் ரீசன்’ என்பதைக் காரணமாக வைத்து, தன்னுடைய மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை ஜெயசூர்யா தர மறுத்துள்ளார். மொபைல் போன் குறித்த கேள்விக்கு, பொய்யான பதில் அளித்துள்ளதாகவும், சிம் கார்டை மறைத்து வைத்து, ஒரு மொபைல் போனை அழித்ததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1996 உலகக் கோப்பையின் நாயகன் ஜெயசூர்யா. இந்த உலகக் கோப்பைத் தொடரில், 214 ரன்கள், 6 விக்கெட்டுகள், 3 கேட்ச்கள், இரண்டு முறை ஆட்ட நாயகன் விருது, தொடர் நாயகன் எனக் கிரிக்கெட் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். ஆனால், இன்று அவர் ஊழல் புகாரில் சிக்கியுள்ளது, அவரின் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் வழக்கில், ஜெயசூர்யாவுக்குத் தொடர்பு நேரடியாகவா அல்லது மறைமுகமாகவா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. கடந்த ஆண்டு, இலங்கை கிரிக்கெட்டின் ஆட்டத்திறன் மந்தமான நிலையை அடைந்தபோது, ஏஞ்சலோ மாத்யூஸை அணியில் எடுக்காததற்கு ஜெயசூர்யாவுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தன. 

ஐ.சி.சி-யின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜெயசூர்யா, ``மேட்ச் ஃபிக்சிங், பிட்ச் முறைகேடு செய்ததாக என் மீது புகார் இல்லை. விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றே என் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுவரையிலான என் பணியில் முறைகேடுகள் எதுவும் செய்ததில்லை. இனிமேலும் அது தொடரும்” என்றார். 

தொடரும் குற்றச்சாட்டுகள்

2016-ம் ஆண்டு முதலே, இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் சார்ந்த புகார்கள் தொடர்ந்து தலைப்பு செய்திகளாக வந்துகொண்டிருக்கும் நிலையில், அந்த நாட்டின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரத்தின் மீதான ஊழல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கில ஊடகம் அல்-ஜசீரா நடத்திய மறைமுக விசாரணையில், இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின்போது, இலங்கையின் காலே மைதானத்தில் உள்ள பிட்ச்சில் முறைகேடு நடந்ததில் 37,000 டாலர் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.


டிரெண்டிங் @ விகடன்