சுனில் நரைன், சயீத் அஜ்மல் பெளலிங்கை சோதித்த இடத்துக்கு ஒரு விசிட்! #CSS | Center for Sports Science offers international standard sports science course

வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (17/10/2018)

கடைசி தொடர்பு:18:17 (17/10/2018)

சுனில் நரைன், சயீத் அஜ்மல் பெளலிங்கை சோதித்த இடத்துக்கு ஒரு விசிட்! #CSS

சுனில் நரைன், சயீத் அஜ்மல் பெளலிங்கை சோதித்த இடத்துக்கு ஒரு விசிட்! #CSS

ஒருநாள்  உசேன் போல்ட் இப்படிச் சொன்னார்...

``தங்களுடைய இருக்கைகளில் உட்கார்ந்து டிவியைப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைய வேண்டும். டிவியை வெறித்துப் பார்த்தபடி `இப்போது இங்கு என்ன நடந்தது?' என்று அவர்கள் ஆச்சர்யப்பட வேண்டும். அவர்களுக்கு அந்த ஆச்சர்யத்தைக் கொடுக்கத்தான் நான் மிகக் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறேன். என் உழைப்பில் அறிவியலையும் இணைத்திருக்கிறேன். அது சொல்லும் மாற்றங்களையும் செய்து வருகிறேன். இனி வரும் காலங்களில் இன்னும் நிறைய ஆச்சர்யங்களை நிகழ்த்துவேன்..."

இதைச் சொன்ன போது போல்ட் லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சில நாள்கள் ஆகியிருந்தன. இந்த இடத்தில் போல்ட் சொன்ன `அறிவியல்’ மிகவும் முக்கியமான விஷயம். 

போல்ட் வித்தியாசமானவர். உச்சத்தில் தொடக்க வேகத்தை எடுக்கவும் (Top Acceleration), எடுக்கும் வேகத்தை அதன் உச்சத்திலேயே தொடரவும் (Maintain Top Speed) திறன் கொண்டவர். மற்ற வீரர்களுக்கு 100மீ கடக்க சராசரியாக 44 அடிகள் தேவைப்படும். ஆனால், போல்ட்டின் உயரம் காரணமாக சராசரியாக 41 அடிகளில் கடந்துவிடுவார். உயரம் மட்டுமல்ல போல்ட்டின் உடல் எடையும் அதிகம். அதனால், அவர் பூமி மீது அதிகப்படியான அழுத்தத்தைத் தர வேண்டும். ஒவ்வோர் அடிக்கும் அவர் அதிக தூரத்தைக் கடக்கும் அதே சமயம், அதிகப்படியான ஆற்றலை பூமி மீது வெளிப்படுத்துகிறார். பூமி அந்த ஆற்றலை உள்வாங்கி, போல்ட்டின் கால்களுக்குத் திரும்பக் கொடுக்கிறது. அது அவரை முன்னால் உந்தித் தள்ளுகிறது. 

#CSS

அதிக ஆற்றலை வெளிப்படுத்த உறுதியான தசைகள் (Muscles) வேண்டும். அதனால், போல்ட் `ஜிம் வொர்க் அவுட்’ (Gym Workouts) செய்து தன் தசைகளை வலுப்படுத்த வேண்டும். அவர் ஓட்டத்தில் இரண்டு நிலைகள் இருக்கின்றன. `ஸ்டேன்ஸ் பேஸ்’ (Stance Phase) - அது அவரின் ஒரு கால் நிலத்திலும், ஒரு கால் காற்றிலும் இருக்கும் நிலை. மற்றொன்று `ஃப்ளைட் பேஸ்’ (Flight Phase) - அது அவரின் இரண்டு கால்களும் காற்றில் இருக்கும் நிலை. அந்த நிலையில் அவரின் ஆற்றல் அதிகமாக வெளிப்படுகிறது.... 

இன்னும் நிறைய இருக்கிறது... போல்ட்டின் வெற்றிக்குப் பின்னால் அத்தனை அறிவியல் ஆய்வுகள் இருக்கின்றன. மில்கா சிங் ஓடிய காலம் இல்லை ஹிமாதாஸுக்கு... கால்களின் ஓட்டம் மாறவில்லை. ஆனால், காலத்தின் ஓட்டம் மாறியிருக்கிறது. 

வெயில் கொளுத்திக் கொண்டிருந்த ஒரு மதிய நேரம். சென்னைப் போரூர் ராமச்சந்திராவுக்குள் நுழைந்தோம். அங்கிருந்த நூற்றுக்கணக்கான மரங்களின் நிழல் சற்றே ஆசுவாசத்தைக் கொடுத்தது. `சென்டர் ஃபார் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ்’ (Centre For Sports Science) பெயர் பலகைகள் நம்மை அதிக சிரமமில்லாமல் வழிகாட்டி இடத்துக்குக் கொண்டு சென்றது. ட்ராக் பேன்ட், டீ ஷர்ட்களில் நிறைய பேர் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார்கள். சிலர் கையில் `கிட்’ பேக்குகளோடு (Kit Bag). அந்த வராண்டாவில் பல கிரிக்கெட் வீரர்கள் படங்கள் அழகழகாக வரையப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தன. பெரும்பாலானவற்றில் கிறிஸ்டியனா பியர்ஸ் (Christiana Pierce) என்ற பெயர் இருந்தது.

#CSS

விளையாட்டு தொடர்பான அறிவியல் படிப்புகள், ஆராய்ச்சிகள், பயிற்சிகள், விளையாட்டுக் காயங்களுக்கான பிரத்தியேக சிகிச்சை, விளையாட்டு மேம்பாட்டுக்கான அதிநவீனத் தொழில்நுட்பங்கள், உலகில் மொத்தமே 4 இடங்களில் மட்டுமே இருக்கும் `பயோ மெக்கானிக்கல் லேப்’ (Bio Mechanical Lab), ஒவ்வொரு விளையாட்டுக்குமான பிரத்தியேக பயிற்சி மையங்கள், உலகின் மிகச் சிறந்த பயிற்சியாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என மொத்த இந்திய விளையாட்டுத் துறையையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் திறன்களோடு கம்பீரமாய் எழுந்து நிற்கிறது போரூர் ராமச்சந்திராவின் `சென்டர் ஃபார் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ்" (Centre For Sports Science). 

அறிமுகத்துக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. சஞ்சய் மிக எளிமையாகப் பேசத் தொடங்கினார்...

``நம் உடலின் முழு ஆற்றலை வெளிப்படுத்தச் செய்வதுதான் ஸ்போர்ட்ஸ் சயின்ஸின் அடிப்படை. அதைத்தான் நாங்கள் இங்கு செய்கிறோம். முன்பெல்லாம்,  ஒரு டெக்னிக்கை வாய் மொழியாகக் கடத்துவார்கள். அது நூற்றில் பத்துப் பேருக்குத்தான் கடத்தப்படும். அதேசமயம், அந்த டெக்னிக்கை அறிவியலாக கொண்டு சென்றால் நூற்றில் தொண்ணூறு பேருக்கு அது கடத்தப்படும். வாங்க... உங்களுக்கு இந்த இடத்தைச் சுற்றிக் காட்டுகிறேன்" - என்று சொன்னபடி நம்மை அழைத்துச் சென்றார் CSSஸ்யின் கிரிக்கெட் பிரிவு தலைவர் சஞ்சய். 

பயோ மெக்கானிக்ஸ் (Bio Mechanics):

தரை தளத்திலிருந்த இருந்த பயோ மெக்கானிக் லேப்பிற்குத் தான் முதலில் சென்றோம். 

``உள்ள ரப்பர் ஷூக்கு மட்டும்தான் அனுமதி. அதனால, உங்க ஷூவைக் கழட்டிடுங்க" என்று சொன்னார். ஏன்? எனக் கேட்கும் முன்னரே சஞ்சய் தொடர்ந்தார்...

ஒலிம்பிக்

``இந்தத் தரை முழுக்கவே மிக விலை உயர்ந்த, உலகத் தரத்திலானது. இதை ``யூனி டர்ப்ஃ" (Uni Turf) என்று சொல்லுவார்கள். இதற்கான ஐரோப்பிய நாட்டின் தரச் சான்றிதழும் பெற்றிருக்கோம்." என்றபடி உள்ளே அழைத்துச் சென்றார். 

மிக உயரமான சீலிங். நீளமான கிரிக்கெட் நெட்ஸ் இருந்தது. சுற்றிலும் பெரிய, பெரிய ஸ்டாண்ட்களில் கேமராக்கள் இருந்தன. 

``பயோ மெக்கானிக்கல் டெஸ்ட் என்பது ஒரு வீரரின் அத்தனை அசைவுகளையும் மிகத் துல்லியமாகக் கணக்கிடும் ஒரு தொழில்நுட்பம். உங்களுக்கு ஞாபகம் இருக்கா? முத்தையா முரளிதரனின் `தூஸ்ரா' குறித்து சில சர்ச்சைகள் எழுந்தபோது, அவர் உடல் முழுக்க சில வயர்களைப் பொறுத்தி அவருக்கு ஒரு டெஸ்ட் எடுத்தார்களே. கிட்டத்தட்ட அதேதான் இந்த பயோ மெக்கானிக் டெஸ்ட்டும். பெரும்பாலும், கிரிக்கெட்டில் வீரர்களுக்கு இப்படியான சர்ச்சைகள் வரும். இதை `சஸ்பெக்ட் ஆக்‌ஷன்’ (Suspect Action) என்று சொல்லுவார்கள். அதைப் பரிசோதிக்க இது பெரியளவில் உதவும். 

இதை நாங்கள் கிரிக்கெட்டுக்கு மட்டுமல்லாமல், ரோவிங் (Rowing), கபடி, கோல்ஃப் எனப் பல விளையாட்டுகளுக்கும் செய்யுறோம். சஸ்பெக்ட் ஆக்‌ஷன்களைத் தாண்டி ஒரு வீரரின் அசைவுகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதில் பிரச்னைகள் இருக்கும்பட்சத்தில் அதற்குத் தேவையான மாற்றங்களையும் அறிவுறுத்துவோம். கபடியைப் பொறுத்தவரையில் `தமிழ்த் தலைவாஸ்' அணி இங்குதான் பயிற்சி மேற்கொள்கிறது. 

#CSS

உலகிலேயே இந்த பயோ மெக்கானிக்கல் லேப் மொத்தம் 5 இடங்களில் மட்டுமே இருக்கின்றன. ஆஸ்திரேலியாவின் ப்ரிஸ்பேனில் ஒன்று, தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் ஒன்று, இங்கிலாந்தில் இரண்டு மற்றும் இந்தியாவில் இங்கு 2014-ல் இதைத் தொடங்கினோம். பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி-ன் சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறோம். அடுத்தது இன்னுமொரு முக்கியமான இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன் வாருங்கள்..." என்றபடி லிஃப்ட்டில் 2 என்ற எண்ணை அழுத்தினார். 

ஹை பெர்ஃபார்மென்ஸ் சென்டர் (High Performance Centre):

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... ஒரு உசைன் போல்ட்டை ஜெயிக்க அவரோடு ஓடும் வீரர்களுக்குத் தேவை சில மைக்ரோ செகண்ட் முன்னேற்றம்தான். அந்தச் சில மைக்ரோ செகண்டுகளுக்காகத்தான் அத்தனை போராட்டங்களும். அந்த மாதிரியான வீரர்களுக்கான இடம்தான் இது. 

ஒலிம்பிக்

பயோ மெக்கானிக்ஸில் அவர்களின் உடல் அசைவுகளை அலசிவிடுவோம். அதன் மூலம் அவர்களின் உடல் அசைவில் என்ன மாற்றங்களை, முன்னேற்றங்களை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான பயிற்சிகள் இங்கு வழங்கப்படும். ஒவ்வொரு வீரருக்கு ``Muscle Memory" மற்றும் ``Cell Memory" என்று இரண்டு விஷயங்கள் இருக்கும். இயற்கையாக நம் தசைகளில் இருக்கும் மெமரி ரொம்ப முக்கியமானது. அதை மாற்றுவது மிகவும் சிரமம். ஆனால், அதை மாற்றினால் தான் மிகப் பெரிய மாற்றத்தை பெர்ஃபார்மன்ஸில் கொண்டு வர முடியும். குறிப்பாக, 19 வயதிற்குட்பட்டவர்களுக்கு இது மிகவும் அவசியம், எளிதும் கூட. இங்கு அவ்வளவு எளிதாக யாரும் பயிற்சி எடுத்திட முடியாது. இது ``Elite Level" வீரர்களுக்கானது. காரணம், பயிற்சிகள் அவ்வளவு கடினமானதாக இருக்கும். 

இன்னும் பல மணி நேரம் பல இடங்களுக்குத் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தோம். ஓரிடத்தில் சில சிறுவரும், சிறுமியரும் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து ஆச்சர்யத்தோடு சஞ்சயைப் பார்த்தோம்...

``இது ககன் நரங்கின் துப்பாக்கிச் சுடு அகாடமி. கிரிக்கெட்டுக்கு வாட்மோரின் அகாடமி (ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவ் வாட்மோர்), ரோவிங்கிற்கான அகாடமி இப்போதைக்கு இருக்கின்றன. இனி ஒவ்வொரு விளையாட்டுக்குமான அகாடமிகளையும் உருவாக்கும் திட்டம் இருக்கிறது. சர்வதேச தரத்திலான ஃபுட்பால் கோர்ட் இப்போதுதான் கட்டி முடித்திருக்கிறோம். சென்னையின் எ.ஃப்.சி இங்குதான் தங்கிப் பயிற்சி எடுக்க இருக்கிறார்கள். 

ஒலிம்பிக்

அதுமட்டுமல்லாமல், `ஸ்போர்ட்ஸ் மெடிசின்’ (Sports Medicine) மற்றும் `ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி’ (Sports Psychology) பிரிவுகள் இருக்கின்றன. விளையாட்டுக் காயங்களுக்கான அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ள தனி `ஆந்த்ரோஸ்கோபி’ (Anthroscopy) பிரிவு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் `ஸ்போர்ட்ஸ் சயின்ஸ்’ குறித்த 4 வருடப் பட்டப்படிப்பும் இங்கிருக்கிறது. பல சர்வதேசப் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். போட்டி முடித்து வீரர்கள் ஓய்வெடுக்க `Rehabilitation Camps’, போட்டிக்கு முன்னர் வீரர்கள் தயாராக `Preparatory Camps’ எனப் பல வசதிகளும் இருக்கின்றன. மாநிலளவில் ஜெயிக்க திறன் உள்ள ஒரு வீரரை, சர்வதேசப் போட்டிகளுக்குத் தயார்ப்படுத்தும் அறிவியலும், ஆற்றலும் இங்குக் கொட்டிக் கிடக்கின்றன. 2024 ஒலிம்பிக்கில் இந்தியா பல போட்டிகளிலும், பல பதக்கங்களை வெல்ல CSS முக்கியப் பங்கு வகிக்கும். அதை நோக்கித்தான் எங்கள் பயணம்" என்று மொத்தமாகச் சொல்லிவிட்டு நம்மிடமிருந்து வரும் கேள்விகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். 

ஒலிம்பிக்

எல்லாம் சிறப்பாக இருக்கிறது. ஆனால், இந்த வசதிகளைப் பயன்படுத்த எளிய பின்னணியிலிருந்து வரும் வீரர்களுக்குச் சாத்தியமா?

``ம்ம்ம்... கொஞ்சம் சிரமம்தான். இங்கிருக்கும் பொருள்கள் அனைத்துமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. ஒவ்வொரு கருவியும் பல லட்சம், பல கோடிகள். ஒரு கருவியை ஒரு மணி நேரம் இயக்கவே பல ஆயிரங்கள் செலவாகும். ஆனால், இதையெல்லாம் கடந்து இதை எல்லோருக்குமான இடமாகக் கொண்டு போகும் சில முயற்சிகளை எடுத்து வருகிறோம். குறிப்பாக, 4 வருடங்களுக்கு முன்பாகவே தடகள வீரர்களுக்காக SAI (Sports Authority of India) மற்றும் SDAT (Sports Development Authority of Tamilnadu) ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்தோம். ஆனால், முதல் 2 வருடங்கள் அவர்கள் ஒரு வீரரைக் கூட இங்குப் பயிற்சிக்கு அனுப்பவில்லை. நிர்வாக ரீதியில் அவர்களுக்குள் பல சிக்கல்கள். இது போன்ற விஷயங்களை எல்லாம் கலைந்து, அரசும் இன்னும் முயற்சிகளை மேற்கொண்டால்... நாங்களும் ஒத்துழைக்கத் தயாராகவே இருக்கிறோம். எல்லாம் சரியாக நடந்தால் 2024 ஒலிம்பிக்கில் இந்தியா மிக முக்கிய சக்தியாக மாறும்..." என்று பெரும் கனவோடு சிரித்தபடி நமக்கு விடை கொடுத்தார். 

#CSS

சர்வதேச தரத்திலான தொழில்நுட்பங்களும், பயிற்சியாளர்களும், கருவிகளும் இருக்கின்றன. சர்வதேசப் போட்டிகளில் வெல்லும் திறமையோடும், துடிப்போடும் பல வீரர்களும் இங்கிருக்கின்றனர். தேவை இவை இரண்டுக்குமான இணைப்புப் புள்ளி...

``என்னால் என் கனவு ஸ்போர்ட்ஸ் காரை வாங்கமுடியவில்லை. அதனால், அதை நானே கட்டமைத்தேன்."

            - ஃபெர்டினான்ட் பார்ஷே. (Ferdinand Porsche) - பார்ஷே கார் நிறுவனத்தின் நிறுவனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்