வெளியிடப்பட்ட நேரம்: 15:47 (18/10/2018)

கடைசி தொடர்பு:15:47 (18/10/2018)

‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா!’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி அவுட் ஆன விதம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது.

அசார் அலி


பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 282 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாகிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்தன. ஆஸ்திரேலியா அணி 145 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 137 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் முகமது ஹபீஸ் விரைவிலே அவுட் ஆகி வெளியேறினார். ஃபகார் ஜமாம்- அசார் அலி பாகிஸ்தான் இன்னிங்ஸை கட்டமைத்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. அசார் அலி- ஹரிஷ் சோஹைல் களத்தில் இருந்தனர். 

3-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலே சோஹைல் வெளியேற்றப்பட்டார். அசார் அலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டு இருந்ததால் பாகிஸ்தான்  ரசிகர்கள் நிம்மதியாக இருந்தனர். ஆனால், அவர் இப்படி அவுட் ஆவார் என ஆஸ்திரேலிய வீரர்களே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். பீட்டர் சிடில் வீசிய 52 வது ஓவரை அசார் எதிர்கொண்டார். அசார் ஆடிய பந்து எட்ஜ்-ஆகி தேர்டு மேன் திசையில் சென்றது. எல்லைக்கோடு வரை சென்ற பந்து எல்லையைத் தாண்டாமல் நின்றுவிட்டது. மிட்சல் ஸ்டார்க் அந்தப் பந்தை எடுத்து கீப்பரிடம் வீசினார். பந்து எல்லைக்கோட்டைத் தாண்டிச் சென்றுவிட்டதாக அசார் அலி கீரிஸ்-க்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தார். கன நேரம்கூட யோசிக்காத பெய்ன், அசார் அலியை ரன் அவுட் செய்தார். சற்றும் இதை எதிர்ப்பாராத அசார் அலி ஒரு கணம் அப்படியே திகைத்து நின்றார். ரசிகர்களுக்கும் ஏமாற்றம். அசார் அலியின் ரன் அவுட்டை பாக். பயிற்சியாளரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த அசார் சதம் அடிப்பார் என எண்ணிய நிலையில் இப்படி அவுட்- ஆனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.