வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (19/10/2018)

கடைசி தொடர்பு:13:15 (19/10/2018)

`என் குழந்தைகளே கேலியாக பேசுவார்கள்!'- ரன்அவுட்டால் வேதனைப்படும் அசார் அலி

``வாழ்நாள் முழுவதும் என் குழந்தைகள் இந்த ரன் அவுட்டை வைத்துக் கலாய்த்து தள்ளுவார்கள்'' எனப் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசார் அலி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்

Photo Credit: https://twitter.com/AkberAJaffri

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த அசார் அலி, ஆஸ்திரேலியா வீரர் பீட்டர் சிடில் வீசிய 52-வது ஓவரை அசார் எதிர்கொண்டார். அசார் ஆடிய பந்து பேட்டில் பட்டு எட்ஜ் ஆகி தேர்டு மேன் திசையில் சென்றது. எல்லைக்கோடு வரை சென்ற பந்து எல்லையைத் தாண்டாமல் நின்றுவிட்டது. மிட்சல் ஸ்டார்க் அந்தப் பந்தை எடுத்து கீப்பரிடம் வீசினார். பந்து எல்லைக்கோட்டைத் தாண்டிச் சென்றுவிட்டதாக அசார் அலி கீரிஸூக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தார். கன நேரம்கூட யோசிக்காத பெய்ன், அசார் அலியை ரன் அவுட் செய்தார். சற்றும் இதை எதிர்பாராத அசார் அலி ஒரு கணம் அப்படியே திகைத்து நின்றார். 

போட்டிக்குப் பின்னர் இதுகுறித்து பேசியுள்ள அசார், ``வாழ்நாள் முழுவதும் என் குழந்தைகள் இந்த ரன் அவுட்டை வைத்து கலாய்த்து தள்ளுவார்கள். ரன் அவுட் குறித்து கேலியாக பேசுவார்கள். பல வருடங்களுக்கு இதுகுறித்தே பேசுவார்கள். பந்து எல்லைக்கோடு அருகே சென்று நிற்கும் அதை ஒரு ஃபீல்டர் எடுத்து எறிவார் என நினைக்கவில்லை. மிட்சல் ஸ்டார்க் அந்தப் பந்தை டிம்- பெய்னிடம் வீசினார். எல்லைக்கோட்டுக்குச் சென்ற பந்தைத் தூக்கி வீசுகிறார் என நினைத்துக்கொண்டிருந்தேன். டிம் பெய்ன் ஸ்டெம்பை நோக்கி ஓடி வந்தார். அது எனக்கு விநோதமாக இருந்தது. ஆனால், அதன் பின்னர் நடந்தவை எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அது என்னுடைய தவறுதான்” எனக் கூறியுள்ளார்.