வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (21/10/2018)

கடைசி தொடர்பு:16:30 (21/10/2018)

`பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாட நான் ரெடி; ஆனால்....!’ கிறிஸ் கெய்லின் கண்டிஷன்

தனது ஒரே ஒரு நிபந்தனையைப் பூர்த்தி செய்தால் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பேன் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் கூறியிருக்கிறார். 

கிறிஸ் கெய்ல்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி20 ஸ்பெஷலிஸ்டான கிறிஸ் கெய்ல், உலகில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். முதன்முறையாகத் தொடங்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் `தி பல்க் லெஜண்ட்ஸ்’ (The Balkh Legends) அணியை வழிநடத்தி வரும் கெய்ல், அந்த அணியை இறுதிப் போட்டிக்கு வரை தகுதிபெறச் செய்துள்ளார். நடப்பு தொடரில் அதிரடி காட்டி வரும் கெய்ல், தொடர்ச்சியாக 3 அரை சதங்கள் அடித்து அசத்தி வருகிறார். 5 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் இறுதிப் போட்டி ஷார்ஜாவில் இன்று நடக்கிறது. மேலும், இந்தத் தொடரில் பிரபல வீரர்களான பிரெண்டன் மெக்கல்லம், ஷாகித் அஃப்ரிடி உள்ளிட்ட 30 சர்வதேச வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர். 

கிறிஸ் கெய்ல், இதுவரை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றதில்லை. இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த கெய்ல், ``அந்த நாடுகளுக்கு இதுவரை நான் சென்றதில்லை. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், முன்னாள் கிரிக்கெட்டர் என்பதால், அங்கு சென்று அவருடன் நேரம் செலவிடுவது மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதில் எனக்குப் பிரச்னை இல்லை. பிரைவேட் ஜெட் ஒன்று இருந்தால், அந்த நாடுகளுக்குச் செல்ல ஆர்வமாக இருக்கிறேன். இந்த ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் பூர்த்தி செய்தால், அந்த நாடுகளுக்குப் பயணித்து அங்கு நடைபெறும் போட்டிகளில் பங்குபெறத் தயாராக இருக்கிறேன்’’ என்று அவர் குறிப்பிட்டார். 

ஆப்கானிஸ்தான் பிரிமீயர் லீக் தொடருக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐசிசி ஒப்புதல் அளித்தது. 5 அணிகள் பங்கேற்ற முதல் சீசன் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த சீசனை பிரமாண்டமாக நடத்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருக்கிறது. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த சீசனின் சில போட்டிகளை ஆப்கானிஸ்தானில் நடத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதேபோல், இலங்கை அணி வீரர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அதிகம் நடைபெறவில்லை. பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரின் சில போட்டிகள் மட்டுமே அங்கு நடத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானுக்குச் செல்ல பல சர்வதேச அணிகளும் மறுப்புத் தெரிவித்து வருவதால், துபாய் மற்றும் ஷார்ஜா மைதானங்களில் அந்த நாடு பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன.