`200வது போட்டியில் சொதப்பிய சாமுவேல்ஸ்; ஹெட்மெயர் அதிரடி சதம்’ - 322 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் #INDvWI | WI sets 323 runs target for India in first ODI

வெளியிடப்பட்ட நேரம்: 17:36 (21/10/2018)

கடைசி தொடர்பு:17:36 (21/10/2018)

`200வது போட்டியில் சொதப்பிய சாமுவேல்ஸ்; ஹெட்மெயர் அதிரடி சதம்’ - 322 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் #INDvWI

இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஹெட்மெயர் அதிரடியாக ஆடி சதமடித்தார்.

இந்திய வீரர்கள்

Photo Credit: BCCI

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்ற நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். 

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் இன்னிங்ஸை கிரண் பவல் மற்றும் சந்திரபால் ஹேம்ராஜ் ஆகியோர் தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 19 ரன்கள் சேர்த்த நிலையில் ஹேம்ராஜ் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவல், அரை சதமடித்த நிலையில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய மர்லன் சாமுவேல்ஸ், ரன் கணக்கைத் தொடங்காமலேயே ஆட்டமிழந்தார். சாமுவேல்ஸ் பங்கேற்கும் 200வது ஒருநாள் போட்டி இதுவாகும்.

ஹெட்மெயர்

Photo Credit: BCCI

வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், மறுமுனையில் ஹெட்மெயர் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 78 பந்துகளில் 106 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில், 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். கடைசி ஓவர்களில் கெமர் ரோச் மற்றும் தேவேந்திர பிஷூ ஆகியோர் ரன்குவிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் சஹால் 3 விக்கெட்டுகளும், ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.