`ரோஹித் ஷர்மா சாதனை; விராட் கோலி அசத்தல் சதம்!’ - வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா #INDvWI | India beat WI by 8 wickets in First ODI

வெளியிடப்பட்ட நேரம்: 21:03 (21/10/2018)

கடைசி தொடர்பு:09:54 (22/10/2018)

`ரோஹித் ஷர்மா சாதனை; விராட் கோலி அசத்தல் சதம்!’ - வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா #INDvWI

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைபெற்றது.

விராட் கோலி - ரோஹித் ஷர்மா

Photo Credit: BCCI

அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தது. இதையடுத்து, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 322 ரன்கள் சேர்த்தது. இளம் வீரர் ஹெட்மெயர் சதமடித்து அசத்தினார். 

323 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே தவான் விக்கெட்டை இழந்தது. அறிமுக வீரர் தாமஸ் ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். இதையடுத்து, இரண்டாவது விக்கெட்டுக்கு ரோஹித் ஷர்மாவுடன் கைகோத்த கேப்டன் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களுக்குக் கடுமையான நெருக்கடிகொடுத்தார். மோசமான பந்துகளை அடித்து ஆடிய இந்த ஜோடி, இரண்டாவது விக்கெட்டுக்கு 246 ரன்கள் குவித்தது. 88 பந்துகளில் 36-வது சதத்தைப் பூர்த்திசெய்த விராட் கோலி, 140 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மாவும் சதமடித்து அசத்தினார். 51 பந்துகளில் அரை சதம் கடந்த ரோஹித் ஷர்மா, 84 பந்துகளில் சதமடித்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இது அவரது 20-வது சதமாகும்.

39.5 ஓவர்களில் 300 ரன்களைக் கடந்த இந்திய அணி, 42.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ரோஹித் ஷர்மா, 152 ரன்களுடனும், அம்பாதி ராயுடு 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அறிமுக வீரர் தாமஸ் மற்றும் பிஷூ ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் 152 ரன்கள் குவித்த ரோஹித் ஷர்மா, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 150-க்கும் அதிகமான ஸ்கோரை அதிக முறை கடந்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். ஒருநாள் போட்டிகளில் ரோஹித் ஷர்மா 6 முறை 150-க்கும் அதிகமான ஸ்கோரைக் கடந்திருக்கிறார். இந்தப் பட்டியலில், அவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் (5), ஜெயசூர்யா, கெய்ல், அம்லா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் (4 முறை) இருக்கின்றனர். இவ்விரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது.