வெளியிடப்பட்ட நேரம்: 16:58 (22/10/2018)

கடைசி தொடர்பு:16:58 (22/10/2018)

`19 ஆண்டுகள் பயணம்!’ - அறிமுகமான மைதானத்திலேயே ஓய்வுபெறும் ரங்கணா ஹெராத்

டெஸ்ட் போட்டிகளில் 19 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான மைதானத்திலேயே ஓய்வு பெறுகிறார் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ரங்கணா ஹெராத். 

ஹெராத்

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான இடது கை சுழற்பந்துவீச்சாளராகக் கருதப்படும் ரங்கணா ஹெராத், இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டுடன் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற இருப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்குக் கடிதம் மூலம் அவர் தகவல் தெரிவித்துள்ளார். ஓய்வு முடிவு குறித்து ஹெராத் பேசியதை உறுதி செய்துள்ள இலங்கைக் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர், இது முழுக்க முழுக்க அவரது தனிப்பட்ட முடிவு என்று தெரிவித்திருக்கிறார்.

19 ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அதே மைதானத்தில் (காலே), தனது கடைசி டெஸ்ட் போட்டியில் ஹெராத் விளையாட இருக்கிறார். 40 வயதான ரங்கணா ஹெராத், இலங்கை அணிக்காக இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 430 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 10வது இடத்தில் இருக்கும் ஹெராத், கடந்த 2016-ம் ஆண்டில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் தொடருக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹெராத், வரும் நவம்பர் மாதத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக காயங்களால் அவதிப்பட்டு வந்த ஹெராத், ஓய்வுபெற முடிவெடுத்திருக்கிறார்.