வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (23/10/2018)

கடைசி தொடர்பு:18:15 (23/10/2018)

``நான் 100% சுத்தமானவன்!'' - MeToo-வில் சிக்கிய ரொனால்டோ மறுப்பு

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை ரொனால்டோ மறுத்துள்ளார்.

``நான் 100% சுத்தமானவன்!'' - MeToo-வில் சிக்கிய ரொனால்டோ மறுப்பு

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ தற்போது இத்தாலி கிளப் யுவன்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ரியல்மாட்ரிட் போல இன்னும் யுவன்டஸ் அணிக்காக ரொனால்டோவால் ஜொலிக்க முடியவில்லை. எனினும், யுவன்டஸ் அணியுடன் நடப்பு சீசனில் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்று விட முடியுமென்ற நம்பிக்கையில் இருக்கிறார். களம், களத்துக்கு வெளியே என எங்கிருந்தாலும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாதவர் ரொனால்டோ.  

யுவன்டஸ் அணியில் இணைந்த பிறகு MeToo-வால் ரொனால்டோ மீதும் பாலியல் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் கேத்ரின் மயூர்கா என்ற பெண்ணை ரொனால்டோ பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. 2009-ம் ஆண்டு ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இணைந்த சமயத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 

கடந்த 2017- ம் ஆண்டு ஜெர்மன் பத்திரிகை Der Spiegel -தான் ரொனால்டோ மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து முதலில் செய்தி வெளியிட்டது. ரொனால்டோ மீது லாஸ்வேகாஸ் நகர போலீஸில் கேதரின் புகார் அளித்ததாகவும், உடனே நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கை முடித்து வைக்க அவர் முன்வந்ததாகவும் சொல்லப்பட்டிருந்தது. இதற்காக, ரொனால்டோவின் வழக்கறிஞர்கள் சார்பாக 3,75,000  அமெரிக்க டாலர்கள் பேரம் பேசப்பட்டது என்று Der Spiegel செய்தி வெளியிட்டிருந்தது.

குற்றச்சாட்டு வெளிவந்ததும் உடனடியாக  ட்விட்டரில் ரொனால்டோ மறுப்பு தெரிவித்தார். `உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது' என்று ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார். MeToo-வில் கேத்ரின் குற்றம் சாட்டியதையடுத்து, அவரின் வழக்கறிஞர்கள் ரொனால்டோ மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்ய உள்ளனர். 

இதற்கிடையே, மான்செஸ்டர் நகரில் இன்று நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் யுவன்டஸ் அணியுடன்  மான்செஸ்டர் யுனைடெட் அணி மோதுகிறது. இதற்காக மான்செஸ்டர் வந்த ரொனால்டோ ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் செய்தியாளர்களிடம் மனம் திறந்து உரையாடிய போது, ``நான்100 சதவிகிதம் சுத்தமானவன். களத்திலும் சரி களத்துக்கு வெளியேயும் சரி என்னிடம் ஒழுங்கு உண்டு. இதனால், மகிழ்ச்சியான மனிதனாக உள்ளேன்'' என்றார்.

``நான் ஒரு அற்புதமான அணிக்காக விளையாடி வருகிறேன். அருமையான, நிறைவான குடும்பம் உள்ளது. 4 குழந்தைகள் இருக்கின்றனர். ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னிடம் இல்லாத விஷயங்களே இல்லை. அற்பக் குற்றச்சாட்டுகள் என் மகிழ்ச்சியைப் பாதிக்காது. எந்தச் சூழலிலும் நான் பொய் சொன்னதில்லை. என் வழக்கறிஞர்களும் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். நான் எப்போதும் உண்மைக்குத்தான் முதலிடம் கொடுப்பேன். கால்பந்தை அனுபவித்து விளையாடி வருகிறேன். கால்பந்திலிருந்து ஓய்வு பெற்றதும் மீதி வாழ்க்கையைக் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் கழிப்பேன்' என்றார் உற்சாகமாக.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் `ஹெச்' பிரிவில் யுவன்டஸ், மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் இடம்பெற்றுள்ளன. பட்டியலில் 6 புள்ளிகளுடன் யுவன்டஸ் அணி முதலிடத்தில் உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் அணி 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முன்னதாக வாலன்சியா அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, ரொனால்டோ முரட்டு ஆட்டம் ஆடினார். இதனால் சிவப்பு அட்டை பெற்ற  அவருக்கு ஒரு ஆட்டத்தில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டது. எனினும் யுவன்டஸ்அணி  2 கோல்கள் அடித்து வாலென்சியாவை வீழ்த்தியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்