வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (24/10/2018)

கடைசி தொடர்பு:21:24 (24/10/2018)

தொடரும் கோலியின் ருத்ரதாண்டவம்; வெ.இ அணிக்கு 322 ரன்கள் இலக்கு! #INDvsWI

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி  விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 321 ரன்கள் குவித்துள்ளது.

விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். டெஸ்ட், ஒரு நாள் என எந்த பார்மெட்டாக இருந்தாலும் அதிரடி ஆட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதனால் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு சாதனைகளாக முறியடித்து வருகிறார். இந்த வருடம் அவர் குவித்த சாதனைகள் பல. தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் கலக்கி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சாதித்தவர் முதலாவது ஒருநாள் போட்டியில் முத்திரை பதிக்கத் தவறவில்லை. முதல் ஒரு நாள் போட்டியில் 140 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இது அவரது 36வது சதமாகும். மேலும் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 60 சதங்களைப் பூர்த்தி செய்ததுடன் குறைந்த இன்னிங்ஸில் இந்தச் சாதனையை படைத்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 

இதற்கிடையே, இன்றைய போட்டியிலும் ஒரு சாதனையைப் படைத்துள்ளார் கோலி. இன்றைய போட்டியில் 81 ரன்கள் எடுத்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் குறைந்த இன்னிங்ஸில் 10,000 ரன்களை கடந்த முதல் வீரரானார். இதன்மூலம் 10 ஆயிரம் ரன்களை எடுத்த 5-வது இந்திய வீரராகவும், ஒட்டுமொத்தப் பட்டியலில் 13வது வீரர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றார். தனது 205 வது இன்னிங்ஸில் இந்தச் சாதனையை அவர் செய்துள்ளார். சச்சினை விட 54 இன்னிங்ஸிற்கு முன்னதாகவே அவர் 10,000  ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, இந்தப்போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா நான்கு ரன்களுக்கு அவுட் ஆக, ஓரளவுக்கு நின்று ஆடிய ஷிகர் தவான் 29 ரன்கள் அடித்தார். இருப்பினும் பின்னர் வந்த அம்பதி ராயுடு, கோலியுடன் கூட்டணி அமைத்து ஆடினார். அவர் 73 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அவருக்குப் பின் வந்த வீரர்கள் செத்தப்பினர். ஆனாலும் கேப்டன் கோலி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை பதம் பார்த்தார். 37வது சதத்தை பூர்த்தி செய்த அவர், கடைசி 10 ஓவர்களில் பௌலர்களை கலங்கடித்தார். 13 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 129 பந்துகளில் 157 ரன்கள் எடுத்தார். இறுதியாக 50 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 321 ரன்கள் எடுத்துள்ளது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க