வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (24/10/2018)

கடைசி தொடர்பு:22:01 (24/10/2018)

நம்பிக்கை நாயகன் `ஹோப்’; `டை’யில் முடிந்த த்ரில் போட்டி #INDvsWI

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹோப்பின் அதிரடி ஆட்டத்தால் டையில் முடிவடைந்தது.

ஹோப்

photo credit:@icc

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலாவதாக களமிறங்கிய இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா நான்கு ரன்களுக்கு அவுட் ஆக, ஓரளவுக்கு நின்று ஆடிய ஷிகர் தவான் 29 ரன்கள் அடித்தார். இருப்பினும் பின்னர் வந்த அம்பதி ராயுடு, கோலியுடன் கூட்டணி அமைத்து சிறப்பாக ஆடினார். ராயுடு 73 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அவருக்குப் பின் வந்த வீரர்கள் சொதப்பினர். ஆனாலும் கேப்டன் கோலி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை பதம் பார்த்தார். 37வது சதத்தை பூர்த்தி செய்த அவர், கடைசி 10 ஓவர்களில் பௌலர்களைக் கலங்கடித்தார். 13 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 129 பந்துகளில் 157 ரன்கள் எடுத்தார். இறுதியாக 50 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 321 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து, கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கீரன் பவல் - ஹேம்ராஜ் இணை சுமாரான துவக்கம் தந்தது. இருவரும் முறையே 18 ரன்கள், 32 ரன்கள் எடுத்து அவுட் ஆக ஹெட்மேயர் - ஹோப் ஜோடி நிலைத்து நின்றது. இதில் ஹெட்மேயர் அதிரடி காட்டினார். 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என இந்திய பௌலர்களைக் கலங்கடித்த அவர் 64 பந்துகளில் 94 ரன்களை எடுத்து வெளியேறினார். அவர் வெளியேறினாலும் நம்பிக்கை தளராத ஹோப் கடைசி வரை நிலைத்து நின்று விளையாடினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச வந்தார். 2-வது பந்தில் நர்ஸ் பவுண்டரி அடித்தார். இருப்பினும் நான்காவது பந்தில் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். இதற்கிடையே கடைசிப் பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்படவே, ஹோப் பவுண்டரி அடித்து அசத்தினார். இதனால் த்ரில் போட்டி டையில் முடிந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹோப் 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க