வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (25/10/2018)

கடைசி தொடர்பு:08:15 (25/10/2018)

``நான் பெருமைகொள்கிறேன்” - சாதனைகள் குறித்து ‘ரன் மெஷின்’ கோலி #KingKohli

 'ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெற்றியின் விளிம்பில் இருந்தும் அதை நாங்கள் தவறவிட்டுவிட்டோம். முழுப் பாராட்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேரும்' என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

விராட் கோலி

Photo Credit: BCCI

இந்திய அணியின் ‘ரன் மெஷின்’ என்று வர்ணிக்கப்படும் கேப்டன் கோலி, தனது அதிரடியான ஆட்டத்தால் அடுத்தடுத்த சாதனைகளைப் புரிந்துவருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அதிரடியாகக் ஆடிய கோலி, 140 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். ஒரு நாள் போட்டியில் தனது 36-வது சதத்தைப் பதிவுசெய்த கோலி,  குறைந்த இன்னிங்ஸில் 60 சதம் ( ஒரு நாள், டெஸ்ட்)  பதிவுசெய்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்த சிம்மாசனத்தில் சச்சின் டெண்டுல்கர் நீண்ட காலமாக அமர்ந்திருந்தார். அவர், 426 இன்னிங்ஸில் 60 சதமடித்திருந்தார். இந்தச் சாதனையை கோலி முறியடித்தார்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில், கோலி 157 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கோலி 47 ரன்கள் எடுத்தபோது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் 1,573 ரன்கள் எடுத்ததே தனிநபர் அதிகபட்சமாகும்.  அவருக்கு அடுத்தபடியாக, கோலி 1,527 ரன்களுடன் கோலி 2-வது இடத்தில் இருந்தார். இந்தச் சாதனையையும் கோலி நேற்று முறியடித்துவிட்டார்

அரைசதம் கடந்த கோலி 81 ரன்கள் எடுத்தபோது, ஒருநாள் போட்டியில் குறைந்த இன்னிங்ஸில் 10,000 ரன்களைக் கடந்த முதல் வீரரானார். இதன்மூலம், 10 ஆயிரம் ரன்களை எடுத்த 5-வது இந்திய வீரராகவும், ஒட்டுமொத்த பட்டியலில் 13 -வது வீரர் என்ற பெருமையையும் தட்டிச்சென்றார். தனது 205-வது இன்னிங்ஸில் இந்தச் சாதனையை அவர் செய்துள்ளார்.  

போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோலி, ``தனிப்பட்ட முறையில் நான் ஆடிய இன்னிங்ஸ் மற்றும் சாதனைகளைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். இது ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெற்றியின்  விளிம்பில் இருந்தும் அதை நாங்கள் தவறவிட்டுவிட்டோம். இந்தப் போட்டிக்கான முழுப் பாராட்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேரும். 3 விக்கெட்டுகளை இழந்த பின்னர் ஹெட்மேயர் - ஹோப் ஜோடி நிலைத்துநின்று அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி 7 ஓவர்களில் போட்டி மீண்டும் எங்கள் கைக்கு வந்தது.குறிப்பாக 5-6-வது ஓவர்கள். ஆனால், உமேஷ் யாதவ் கொடுத்த பவுண்டரியால் எல்லாம் மாறிப்போனது. அம்பத்தி ராயுடுவின் கைகளை சில இன்ச்-களில் பந்து கடந்துவிட்டது” என்றார். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 27-ம் தேதி புனே-யில் நடைபெறும்.