வெளியிடப்பட்ட நேரம்: 17:33 (27/10/2018)

கடைசி தொடர்பு:17:42 (27/10/2018)

ஹோப் கொடுத்த நம்பிக்கை; கடைசி நேர அதிரடியில் நர்ஸ் - இந்தியாவுக்கு 284 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 283 ரன்களை குவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ்

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அந்த வகையில் மூன்றாவது ஒருநாள் போட்டி புனேவில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கீரண் பவெல் மற்றும் சந்திரபால் ஹெம்ராஜ் இணை தொடக்கம் கொடுத்தது. பும்ராவின் 5 ஓவரின் 5 வது பந்தை ஹெம்ராஜ் தூக்கி அடிக்க, அது தோனியின் கைக்குச் சிக்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணி 25 ரன்னுக்கு தனது முதல் விக்கெட்டைப் பறிகொடுத்தது. இதையடுத்து பவெலுடன் ஹோப் இணைந்தார். பும்ராவின் 8வது ஓவரின் முதல்பந்தில் கேட்ச் கொடுத்து பவெல் வெளியேறினார்.

இதையடுத்து ஹோப் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் நிலைத்து ஆட, மற்றவர்கள் சொற்ப ரன்களிலே வெளியேறினர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நம்பிக்கை அளித்து வந்த ஹோப்பை பும்ராவின் பந்து பதம் பார்க்க 44.4 ஓவரில் அவர் போல்டானார். 113 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து அவர் வெளியேறினார். அடுத்ததாகக் கடைசி 5 ஓவர்களில் நர்ஸ் அதிரடி காட்டினார். பவுண்டரி, சிக்ஸர்களாக அவர் விளாசியதுடன் 22 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். அவரின் உதவியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 283 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார்.