வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (29/10/2018)

கடைசி தொடர்பு:13:15 (29/10/2018)

தமிழக கபடி வீரரை பணியிலிருந்து நீக்கிய தபால்துறை! - அதிகாரிகளிடம் பரிந்து பேசிய நண்பர்கள்

திருவாரூர் மாவட்டம் வடுவூர் பகுதியைச் சேர்ந்த அருண் சிறந்த கபடி வீரர். மத்திய அரசின் தபால் துறை பணியாற்றிக்கொண்டிருக்கும் இவர் தபால் துறை அணிக்காகவும் விளையாடி வருகிறார். தற்போது ப்ரோ கபடியில் தமிழ் தலைவாஸ் அணிக்காக விளையாடிக்கொண்டிருக்கும் அருண் பணியில் தொடர்ந்து விடுமுறை எடுக்க அனுமதியில்லை. ஆனால், அருண் விடுமுறை எடுத்து ப்ரோ கபடியில் விளையாடி வருகிறார். இதனால் அவர் பணியிலிருந்து நீக்கப்படுகிறார் என தபால் துறை சார்பாக கடிதம் அனுப்பப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தஞ்சாவூர் மன்னார்குடி சாலையில் உள்ளது வடுவூர் கிராமம். இந்த ஊரில் பெரியவர்கள் தொடங்கி சிறியவர்கள் வரை விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். மேலும், ஆண்களுக்கான கபடி போட்டியில் வடுவூர் சிறப்பு பெற்றும் விளங்கி வருகிறது. இப்பகுதியைச் சேர்ந்த பலர் விளையாட்டில் சிறந்து விளங்கியதன் மூலம் அரசு வேலைகளில் பல முக்கிய பொறுப்புகளில் இந்தியா முழுவதிலும் பணி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், வடுவூர் அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அருண். இவர் கபடிப் போட்டியில் சிறப்பாக விளையாடி மிகச்சிறந்த கபடி வீரராக திகழ்ந்து வந்தார். மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார். இதையடுத்து, இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் தபால் துறையில் இளநிலை உதவியாளர் பணி கிடைத்தது. மேலும், தபால் துறை அணிக்காகவும் விளையாடி பல வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார்.

இந்த நிலையில், ப்ரோ கபடி போட்டியிலும் பங்கேற்று தன்னுடைய திறமையின் மூலம் சிறப்பாக விளையாடி பல வெற்றிகளை குவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் 6-வது சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்காக விளையாடி வரும் அருண் சிறந்த டிபெண்டர் என பெயரெடுத்துள்ளார். இந்த நிலையில், தபால் துறையின் சென்னை தெற்குப் பிரிவு மூத்த கண்காணிப்பாளர் ரெங்கநாதன், தபால் துறை பதவியில் இருந்து அருண் நீக்கப்பட்டுவிட்டதாக கடிதம் அனுப்பியதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அருண் ஊரில் சிலரிடம் பேசினோம், ``அருணுக்கு சின்ன வயதில் இருந்தே கபடிதான் உயிர் மூச்சு. அப்பாவுக்கு விவசாயம்தான் தொழில். இதனால் வறுமையின் பிடியில்தான் இருந்தது அருண் குடும்பம். ஆனாலும் கபடியில் நான் சாதிக்காமல் விடமாட்டேன் என முழு மூச்சாக விளையாடினான். அதேபோல் சாதித்து பல வெற்றிகளைக் குவித்து தமிழகத்துக்குப் பெருமைகளைத் தேடித் தந்தான். இந்த நிலையில், பெரும் போராட்டத்துக்குப் பிறகு அவருக்கு தபால் துறையில் பணி கிடைத்தது. இதற்காக எங்க ஊரே சந்தோஷப்பட்டு மகிழ்ந்தது.

இதையடுத்து, அருண், தபால் துறையில் தற்காலிக ஊழியர்தான் மத்திய அரசு விதிப்படி தொடர்ந்து விடுமுறை எடுக்க அனுமதியில்லை இப்படி இருக்கும்போது முறையான அனுமதி பெறாமல் ப்ரோ கபடியில் விளையாடிக் கொண்டிருக்கிறார். இதனால் பணியில் இருந்து  நீக்கப்படுகிறார் என கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிகிறது இதனால் அவர் குடும்பம் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது என்றனர்.

அருண் உறவினர் ஒருவரிடம் பேசினோம், தபால் துறையில் பணியில் இருந்து  நீக்கப்பட்டுவிட்டதாக கடிதம் எழுதி அனுப்பட்டது. ஆனால் ப்ரோ கபடியில் விளையாடிக் கொண்டிருப்பதால் அந்தக் கடிதம் இன்னும் அருண் கையில் கிடைக்கவில்லை.

இந்தத் தகவல் வெளியாகி பலர் அருணுக்காக பேசியிருக்கின்றனர். இதனால் பணியில் இருந்து நீக்க மாட்டோம் எனச் சொல்லியிருக்கிறது தபால் துறை. இந்தத் தகவலைக் கேட்ட பிறகுதான் எங்களுக்கு நிம்மதியாக இருக்கிறது. இன்னும் சில தினங்களுக்குப் பிறகு முழு விவரங்களும் தெரியவரும். தற்போது அருணுக்குப் பணியில் எந்தப் பிரச்னையும் இல்லை. இதை அருணே அவர் குடும்பத்தினரிடம் தெரியப்படுத்தியுள்ளார்'' என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க