வெளியிடப்பட்ட நேரம்: 20:33 (29/10/2018)

கடைசி தொடர்பு:20:42 (29/10/2018)

ஒரு தடவதான் மிஸ் ஆகும்! - கலீல் அகமது வேட்டையால் வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்தியா 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

கலீல் அகமது

PC : ICC

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தேர்வு செய்தது. ரோஹித் ஷர்மா- ஷிகர் தவான் இணை தொடக்கம் கொடுத்தது. இந்த இணையை 11ஓவரின் 5 வது பந்தில் பவேல் பிரித்தார். இதையடுத்து ரோஹித் ஷர்மாவுடன்- கோலி கைகோத்தார். எப்படியும் இந்த ஆட்டத்திலும் செஞ்சுரி இருக்கு! என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு 16-வது ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. கேமர் ரோச் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கோலி. இருப்பினும் தொடர்ந்து ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. ரோஹித்தும் - ராயுடுவும் களத்தில் நின்று, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சுகளை பறக்கவிட்டனர். கோலியினால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ரோஹித் நிறைவேற்றினார். பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய அவர், 137 பந்துகளில் 162 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய தோனி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியாவுக்காக விளையாடிய ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் எடுக்க இருந்த நிலையில் 9,999 ரன் எடுத்திருந்தபோது தோனி ஆட்டம் இழந்தார். ஒரு ரன்னில் தோனி சாதனையைத் தவறவிட்டார்.

PC : ICC

இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்களை எடுத்தது. 378- ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹேம்ராஜ்-பவல் இணை ஓப்பனிங் கொடுத்தது. பொறுமையாக ரன்களை சேர்த்த இந்த அணியை 4வது ஓவரில் புவனேஸ்வர் குமார் பிரித்தார். அடுத்ததாக முந்தைய ஆட்டங்களில் அணிக்கு பெரும் பலமாக இருந்த ஹோப் களமிறங்கினார். ஆனால், அவர் மீதான ரசிகர்களின் நம்பிக்கையை குல்தீப் யாதவ், அவரை ரன்கள் ஏதும் எடுக்கவிடாமலே வெளியேற்றினார். 5வது ஓவரில் 2 விக்கெட்டுக்கு 20 ரன்களைச் சேர்த்தது நிச்சயம் அந்த அணிக்கு நல்ல தொடக்கமாக இருந்திருக்காது. அடுத்தடுத்து வந்த வீரர்களை வெளியேற்றும் பொறுப்பை கலீல் அகமது எடுத்துக்கொண்டார். அதன்படி 10வது ஓவரில் 45-4 என்ற கணக்கில் தள்ளாடியது வெஸ்ட் இண்டீஸ். அதேபோல, அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறி, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி கட்டத்தில் பொறுப்பாக விளையாடிய கேப்டன் ஹோல்டர் 54 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்தியா சார்பில் கடந்த போட்டியில் தவறவிட்ட வாய்ப்பை இந்தப் போட்டியில் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார் கலீல் அகமது. அவர் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகள் எடுத்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.