வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (30/10/2018)

கடைசி தொடர்பு:07:30 (30/10/2018)

`தொடர் தோல்வி’, `இந்திய தொடர்’ - ஸ்மித், வார்னர் தண்டனை காலம் குறைக்கப்படுகிறதா?

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதித்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியமான `கிரிக்கெட் ஆஸ்திரேலியா’. இந்தச் சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. 

ஸ்மித் வார்னர்

ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணி கடந்த சில மாதங்களாக மோசமாக விளையாடி வருகிறது. அந்த அணியின் செயல்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. தொடர் தோல்விகளால் அந்த அணி துவண்டுபோய் உள்ளது. 

இந்த நிலையில், இந்திய அணி நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலிய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் என ஜனவரி மாதம் வரை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளது. ஸ்மித், வார்னர் மீதான தடை ஏப்ரல் மாதம் தான் முடியும். அதனால் அவர்கள் இருவரும் இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடமுடியாது. 

இந்த நிலையில், முழுபலத்துடன் வரும் இந்திய அணியைச் சமாளிக்க ஸ்மித், வார்னர் ஆகியோரின் தண்டனை குறைக்கப்படுமா என்ற கேள்வி ஆஸ்திரேலிய ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சங்கம், ஸ்மித் மற்றும் வார்னருக்கு வழங்கப்பட்ட தண்டனை கடினமானது என்றும் அவர்களின் தண்டனை காலத்தைக் குறைப்பது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.. 

இந்த நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர், டேவிட் பீவெர்,   ``ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் சிந்தித்துத்தான் அந்தக் கடினமான முடிவை எடுத்தது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும். அதில் தற்போது மாற்றம் எதுவும் வரப்போவதில்லை” என்றார் திட்டவட்டமாக. ஸ்மித் மற்றும் வார்னர் தற்போது உள்ளூர் ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர்.