வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (30/10/2018)

கடைசி தொடர்பு:09:10 (30/10/2018)

`எல்லா புகழும் ராயுடுவுக்கே; கலீல் அபாரம்’ - மனம் திறந்த கோலி

நெருக்கடியில் இருந்து மீண்டு ஒரு அணியாக சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம் என விராட்கோலி பேசியுள்ளார்.

கோலி

Photo Credit: ICC

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் இளம்பந்துவீச்சாளர்கள் கலீல் அஹமது, குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சால் மேற்கு இந்திய தீவுகள் அணியின் டாப் ஆர்டர் சரிந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு தவான் - ரோஹித் சர்மா இணை சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். தவான் அவுட் ஆகி வெளியேறியதும் கோலி தனது இன்னிங்ஸை ஆட வந்தார். கடந்த மூன்று போட்டிகளில் செஞ்சுரி விளாசிய கோலி இந்தியப் போட்டியிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோலி 16 ரன்களில் வெளியேறினார். அப்போது இந்திய அணி 101 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது. இதன் பின்னர் ரோஹித் ஷர்மாவுடன் - அம்பத்தி ராயுடு இணைந்தார். மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை நாலாபுறமும் நொறுக்கிய இந்த இணை 211 ரன்களை குவித்தது. 4-வது வீரராக களமிறங்கிய ராயுடு சதம் அடித்து அசத்தினார். ரோஹித் ஷர்மா 162 ரன்களைக் குவித்தார். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் தான் இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்ட முடிந்தது.

போட்டிக்குப் பின்னர் பேசிய கேப்டன் விராட் கோலி, `` அம்பத்தி ராயுடு தனக்குக் கிடைத்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அவர் ஆட்டத்தை நன்கு கவனிக்கிறார் ஒரு புத்திசாலி நான்காவது வீரராக களமிறங்குவது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம். கலீல் அஹமது சரியான பகுதியில் பந்தை பிட்ச் செய்யக்கூடியவர். அவருடைய பந்துவீச்சு பேசும். கடந்த போட்டியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி எங்களுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். அதில் இருந்து மீண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளோம். ஒரு அணியாகச் சிறப்பாக பணியாற்றியுள்ளோம்” எனப் பேசினார்.
ரோஹித் ஷர்மா
ரோஹித் பேசுகையில்,  ``பயிற்சியின்போது ஸ்லீப் கேட்ச்களை பிடிக்கப் பயிற்சி செய்தேன். போட்டியின்போது சில கேட்சுகளைப் பிடிக்க உதவியாக இருந்தது. கலீல் அஹமதுவின் பந்துவீச்சு மேற்கிந்திய அணிக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டது. 50 ரன்களை எடுப்பதற்குள்ளே அவர்களின் பாதிகதை முடிந்துவிட்டது. இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்த பின்னர் சிறந்த இன்னிங்ஸை கட்டமைத்தது சிறந்த விஷயம். அதுவும் ஆட்டத்தின் போக்கை மாற்றுவதாக அமைந்தது. பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். களத்தின் தன்மையை அறிந்து விளையாட ஆரம்பித்து விட்டால் ரன்களைக் குவிக்கலாம். இதைத்தான் நானும் அம்பத்தி ராயுடுவும் செய்தோம்” என்றார்.