வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (30/10/2018)

கடைசி தொடர்பு:14:50 (30/10/2018)

`அறிவிப்பதற்கே உற்சாகமாக உள்ளது’ - மகிழ்ச்சியின் உச்சத்தில் சானியா, சோயப் தம்பதி

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது. 

சானியா மிர்ஸா

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் தம்பதிக்கு கடந்த 2010-ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து தான் தாயாகவிருப்பதாகக் கடந்த ஏப்ரல் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு அதனுடன் ஹாஸ்டாக் பேபி மிர்ஸாமாலிக் என்ற வார்த்தையும் இணைத்திருந்தார் சானியா மிர்ஸா. 

சானியா மிர்ஸா தாயானதிலிருந்து குழந்தைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும், தன் குழந்தை எப்படி இருக்க வேண்டும் என  குழந்தை தொடர்பான பல விஷயங்கள் குறித்து அதிகமாக சமூகவலைதள பக்கங்களிலும் ஊடகங்களிலும் பகிர்ந்து வந்தார். இந்த நிலையில், தற்போது சானியா மிர்ஸாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரின் கணவர் சோயப் மாலிக் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், `` அறிவிப்பதற்கே மிகவும் உற்சாகமாக உள்ளது. எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சானியா எப்போதும்போல வலுவாக உள்ளார். இறைவனின் ஆசிகள். பலரின் வாழ்த்துகளுக்கு நன்றிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்தத் தம்பதிக்கு உலகில் உள்ள பல ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #babymirzamalik என்ற ஹாஸ்டாக் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.