வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (30/10/2018)

கடைசி தொடர்பு:15:50 (30/10/2018)

தோல்வியால் விரக்தி... மேனேஜரை துரத்திய ரியல் மாட்ரிட்

லா லிகா போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆட்டமாக இருப்பது பார்சிலோனா-ரியல்மாட்ரிட் அணிகளுக்கிடையே நடைபெறும்  El Clasico. கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இந்த ஆண்டின் முதல் El Clasico போட்டியில் பார்சிலோனா 5-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியைத் தோற்கடித்தது. 

ரியல் மாட்ரிட் மேனேஜர் லோப்பிடேகி

கால்பந்து உலகின் சிறந்த வீரர்களுக்குத் தரப்படும் ballon d'or விருதுக்கு 6 மாட்ரிட் வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நிலையில், பரம எதிரியான பார்சிலோனாவுடன் தோற்றுள்ளது மாட்ரிட். இதுமட்டுமில்லாமல் இந்த சீசனில் நடந்த 10 போட்டியில் 4 போட்டிகளில் தோற்கடிக்கப்பட்டு தற்போது புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறார்கள். தோல்வியின் விரக்தியில் மாட்ரிட் அணியின் உரிமையாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட மேனேஜர் ஜூலியன் லோப்பிடேகியை பதவியில் இருந்து நீக்கியுள்ளார்கள். 

கடந்த ஜூன் மாதம் தான் மாட்ரிட் அணியில் இணைந்ததால் ஸ்பெயின் தேசிய கால்பந்து அணியில் இருந்து நீக்கப்பட்டார் ஜூலியன் லோப்பிடேகி. அந்தச் சர்ச்சையே இன்னும் முடியாத நிலையில் மாட்ரிட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 6 மாத இடைவெளியில் இரண்டு மிகப்பெரிய பதவிகளை இழந்துள்ளார் லோப்பிடேகி.

மேனேஜர்களை அவ்வப்போது நீக்குவது ரியல் மாட்ரிட் அணிக்குப் புதிதல்ல. மேனுவல் பெலிகிரினி, ஜோஸ் மொரினோ, கார்லோ ஆன்சிலோட்டி, ரஃபே பெனிடெஸ் எனத் தொடர்ந்து மேனேஜர்களை நீக்கிய வரலாறு வைத்துள்ளது மாட்ரிட். தற்போது தற்காலிகமாக அர்ஜென்டினாவைச் சேர்ந்த சான்டியாகோ சொலாரியை மேனேஜராக நியமித்துள்ளார்கள். யார் புதிய மேனேஜராக வருவார்கள் என்று சான்டியாகோ பெர்னபு அரங்கமே காத்திருக்கிறது.