வெளியிடப்பட்ட நேரம்: 17:48 (30/10/2018)

கடைசி தொடர்பு:17:48 (30/10/2018)

13 ரன்கள்... 3 விக்கெட்... ஆக்ரோஷமான கலீல் - எச்சரிக்கை விடுத்த ஐசிசி

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கெதிரான போட்டியில், கலீல் அஹமது விதிமுறைக்குப் புறம்பாக நடந்துக்கொண்டதால், ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கலீல் அஹமது

மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. நேற்று நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியில் இளம்பந்துவீச்சாளர் கலீல் அஹமது சேர்க்கப்பட்டார். இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில்  5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ரோஹித் ஷர்மா 162 ரன்களும், அம்பத்திராயுடு 100 ரன்களும் எடுத்தனர். இமாலய இலக்கை நோக்கிக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இளம்பந்துவீச்சாளர் கலீல் அஹமதுவின் பந்துவீச்ந்த் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. துல்லியமாகப் பந்துவீசிய கலீல், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முதுகெலும்பைக் காலிசெய்தார். 5 ஓவர் வீசியவர், 13 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியின்போது, விதிமுறைகளுக்குப் புறம்பாக நடந்துகொண்டதால், ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. 14 ஓவரில் வீசியபோது ஒழுங்குமுறை விதிகளை மீறிச் செயல்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அந்த ஓவரில், கலீலின் பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் சாமுவேல்ஸ், ஸ்லிப்பில் நின்ற ரோகித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சாமுவேல்ஸ் விக்கெட்டை கலீல் ஆக்ரோஷமாகக் கொண்டாடினார். இதைக் கவனித்த கள நடுவர்கள் இயான் க்ளவுட், அனில் சவுத்ரி மூன்றாவது நடுவர் பால் வில்சன் மற்றும் நான்காம் நடுவர் சம்சுதீன் ஆகியோர் புகார் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்திய வேகப்பந்துவீச்சாளர் கலீல் அஹமது, போட்டி ஒழுங்கு விதிமுறை 2.5-ஐ மீறி செயல்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டியின்போது, எதிரணி வீரர்களைத் தகாத வார்த்தைகளாலும் செய்கைகளாலும் ஆத்திரமூட்டும் வகையில் நடந்துகொள்வது குற்றமாகும்.இச்சம்பவம் தொடர்பாகக் கண்டனத்தைப் பதிவுசெய்வதோடு, ஒரு மைனஸ் புள்ளி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி-யின் விதிப்படி இதுபோன்ற முதல்நிலை குற்றத்திற்கு, போட்டிக் கட்டணத்திலிருந்து 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும். மேலும், 1 அல்லது 2 மைனஸ் புள்ளிகள் வழங்கப்படும். கலீல் சர்வதேச போட்டிக்குப் புதிது என்பதால், அவருக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது.