உலகின் வயதான டெஸ்ட் கிரிக்கெட்டருக்கு வயது 107... யார் இந்த ஐலீன்? | Oldest living cricketer celebrates her 107th birthday

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (30/10/2018)

கடைசி தொடர்பு:19:50 (30/10/2018)

உலகின் வயதான டெஸ்ட் கிரிக்கெட்டருக்கு வயது 107... யார் இந்த ஐலீன்?

கிரிக்கெட் விளையாட்டுக்கு பெண்கள் என்ட்ரியான காலத்தில் தடம் பதித்த ஐலீனுக்கு ஹாப்பி பர்த்டே வாழ்த்துகள்!

107 வயதான ஐலீன் வீலல், 80 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானவர். 100 வயதைக் கடந்த முதல் பெண் கிரிக்கெட்டரான ஐலீன், 1937 முதல் 1949 வரை இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார். 7 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள ஐலீன், மொத்தம் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.  

இன்று (30.10.2018) தனது 107 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஐலீன். இந்த வயதிலும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் அவர், கிரிக்கெட் மட்டுமல்லாது தனது 98 வயது வரை கோல்ப் போட்டிகளில் பங்கேற்றார். 

2017-ம் ஆண்டு, புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மகளிருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியை, ஐலீன் வீலன் `பெல்’ அடித்துத் தொடங்கி வைத்தார். இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய இந்தப் போட்டியில், 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.

இந்த ஆண்டு தொடக்கத்தில், தற்போதைய இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட், ஐலீனைனுடன் கலந்துரையாடினார். உடலை ஃபிட்டாக வைக்க யோகாசனம் செய்யும் ஐலீன், கிரிக்கெட் குறித்து சில டிப்ஸ்களை பகிர்ந்தார். வரலாற்று சிறப்புமிக்க, 80 ஆண்டுக் கால இங்கிலாந்து மகளிர் அணியின் புகைப்படங்களை பார்த்து மகிழ்ந்த ஐலீன், ``25 வயதுக்குத் திரும்பி மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுகிறேன்” என்று புன்னகைத்தார். கிரிக்கெட் விளையாட்டுக்கு பெண்கள் என்ட்ரியான காலத்தில் ஐலீன் தடம் பதித்திருப்பது செம! 

சர்வதேச கிரிக்கெட்டின் சூப்பர் சீனியருக்கு ஹாப்பி பர்த்டே வாழ்த்துகள்!