வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (31/10/2018)

கடைசி தொடர்பு:07:30 (31/10/2018)

``வாழைப்பழம், ரயில் பயணம், காதல் மனைவி...” உலகக்கோப்பை தொடருக்கு இந்திய வீரர்களின் கோரிக்கை

2019 -ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதி தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் சுமார் ஒன்றரை மாத கிரிக்கெட் திருவிழாவுக்குப்பின்  ஜூலை மாதம் 14-ம் தேதி நிறைவடைகிறது. இந்தப் போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெறுகிறது. மொத்தம் 10 அணிகள் மட்டுமே கலந்துகொள்ளும் இந்த உலகக்கோப்பை தொடருக்கு அனைத்து அணிகளும் தங்களை தயார் செய்து வருகின்றனர். 

இந்திய அணி -உலகக்கோப்பை

இந்திய அணியும் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு, தற்போது விளையாடிவரும் தொடர்களில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் புதிய முயற்சிகளைச் செய்து வருகிறது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக உலகக்கோப்பை தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.  

இதில் இந்திய அணியின் கேப்டன் கோலி, டெஸ்ட் போட்டி துணை கேப்டன் ரஹானே, ஒருநாள் மற்றும் டி20 அணியின் துணை கேப்டன் ரோகித் ஷர்மா, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் தலைமை தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பி.சி.சி.ஐ-யின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் உலகக்கோப்பை தொடர் தொடர்பாக பல்வேறு தகவல்கள் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய வீரர்களுக்கு இங்கிலாந்தில் செய்து தர வேண்டிய வசதிகள் குறித்துப் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர்களுக்குத் தேவையான வாழைப்பழங்கள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் தங்களுக்குப் போதுமான அளவுக்கு வாழைப்பழங்கள் வழங்கப்படவில்லை எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாம். மேலும், இங்கிலாந்தில் தங்களுக்கு ஒதுக்கப்படும் ஹோட்டல்களில் முறையான உடற்பயிற்சி கூடங்கள் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அதன் பின்னர் இங்கிலாந்தில் ரயில் மூலம் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பி.சி.சி.ஐ, பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி முதலில் மறுத்துள்ளது. இங்கிலாந்து வீரர்கள் ரயிலில் பயணிக்கிறார்கள் என வீரர்கள் தரப்பில் தெரிவிக்க, ஏதேனும் விரும்பத்தகாத காரியம் நடந்தால் அதற்கு பி.சி.சி.ஐ பொறுப்பேற்காது என்ற நிபந்தனையுடன் ரயில் பயணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதாம். 

கோலி, ரோகித்

மேலும், உலகக்கோப்பை தொடரில் வீரர்களின் மனைவிகள் மற்றும் காதலிகளை தொடர் முழுவதும் உடன் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அடுத்து நடக்கவிருக்கும் ஆஸ்திரேலிய தொடரில் வீரர்களின் மனைவிகளுக்குப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலர் தங்களின் மனைவியுடன் தனியாக பயணிக்கிறார்கள். இதனால் அணியில் பிணைப்பு குறைவதாக பி.சி.சி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரையில் மனைவிகளை அனுமதிப்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. முக்கிய தொடர்களில் வீரர்களின் கவனம் சிதறாமல் விளையாட வேண்டியது அவசியம் என நிர்வாகக் குழு தெரிவித்துள்ளனர்.