வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (31/10/2018)

கடைசி தொடர்பு:08:02 (31/10/2018)

``பியார்.. பிரேமா.. காதல்..” - கோலை வித்தியாசமாகக் கொண்டாடிய கால்பந்து வீரர்!

கால்பந்து விளையாட்டு, ஆக்ரோஷம், மோதல் போன்றவற்றைத் தாண்டி ஒரு கொண்டாட்டமான விளையாட்டு. விளையாடும் வீரர்களும் சரி, ரசிகர்களும் சரி, போட்டி முழுவதும் கொண்டாட்ட மனநிலையிலேதான் இருப்பார்கள். அதிலும் குறிப்பாக கோல் அடித்த பின்னர், அதைக் கொண்டாடும் விதத்தில் கவனம் ஈர்க்கும் வீரர்களும் உள்ளனர். கிரிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்ததும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்துக்கே தனி ரசிகர்கள் உண்டு.  

காதல் சொல்லும் கால்பந்து வீரர்

ஆனால், மைதானத்தில் வீரர்களின் கொண்டாட்டத்துக்கு சில விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் உள்ளது. விதிமுறைகளை மீறிக் கட்டுப்பாடு இல்லாமல் நடக்கும் வீரர்களுக்கு கள நடுவர் தண்டனைகளை வழங்கலாம். இந்த நிலையில், சிலியன் லீக் கால்பந்து தொடரில் எவர்டான் மற்றும் அண்டோஃபாகஸ்டா அணிகள் மோதிய போட்டியின்போது வெனிசுலா கால்பந்து வீரர் எடுவெர்ட் பெல்லோ வித்தியாசமாகத் தனது கோலைக் கொண்டாடினார். 

ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்திலே அசத்தலாகக் கோல் அடித்த பெல்லோ, உடனடியாக தனது அணியினர் இருந்த கேலரி நோக்கி ஓடினார். அங்கு ஒருவரிடம் இருந்து மோதிரத்தைப் பெற்ற அவர், ரசிகர்கள் இருக்கும் பகுதிக்கு விரைந்தார். எகிறி குதித்துச் சென்ற அவர், அங்கிருந்த தன் காதலியிடம், மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் தான் கொண்டு வந்திருந்த மோதிரத்தை  அவருக்கு அணிவித்துக் காதலை வெளிப்படுத்தினார். அவரின் காதலியும், அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். இந்தச் சம்பவத்தின்போது ரசிகர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். 

பின்னர் களத்துக்கு திரும்பிய பெல்லோவுக்கு நடுவர் யெல்லோ கார்டு காண்பித்து எச்சரிக்கை செய்தார். இறுதியில் எவர்டான் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. தனது அணி தோல்வி அடைந்ததைத் தவிர்த்து, பெல்லோவுக்கு இந்தப் போட்டி வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.