வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (31/10/2018)

கடைசி தொடர்பு:15:25 (31/10/2018)

ராகுல் சவுத்ரி மிரட்டல்.. பாட்னாவை வீழ்த்திய தெலுங்கு டைட்டன்ஸ்! #ProKabaddi

பாட்னாவில் நடந்த ப்ரோ கபடி லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. கிரிக்கெட்டில் கோலி - ஸ்டீவ் ஸ்மித், கால்பந்தில் ரொனால்டோ - மெஸ்ஸிக்கு இடையே ஒப்பீடு, ரைவல்ரி இருப்பது போலவே, ப்ரோ கபடியில் பர்தீப் நர்வால் - ராகுல் சவுத்ரி மோதலுக்கு ஒரு எதிர்பார்ப்பு உண்டு. 80 சதவிகிதம் அணியின் வெற்றியில் இவர்கள் பங்கு இருக்கும். ரெய்டில் கலக்கி புள்ளிகளை அள்ளி வருவார்கள். டேக்கில் யூனிட் தடுமாறும்போதெல்லாம் தூக்கி நிறுத்துவார்கள்.

கபடி

பர்தீப் நர்வால் முதல் ரெய்டில் இருந்து கடைசி நிமிடம் வரை பாய்ன்ட் எடுத்துக்கொண்டே இருப்பார். கடந்த நான்கு சீசன்களாக அவர்தான் ஹீரோ. பாட்னா பைரேட்ஸ் ஹாட்ரிக் சாம்பியன் பட்டம் வெல்வதற்கான காரணகர்த்தா. இதேபோல, ராகுல் சவுத்ரி முதல் சீசனில் இருந்தே கலக்கலாக ஆடி வருகிறார். ரெய்டில் 700 புள்ளிகளுக்கு மேல் எடுத்த வீரர்களுக்கு இடையேயான இரு தனிஒருவன்களின் மோதல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. 

இந்த சீசனில் ராகுல் சவுத்ரியின் ரெய்டு யூனிட்டைவிட அவர்களது டிபண்டிங் யூனிட் மிரட்டி வருகிறார்கள். கடந்த வாரம் இதே பர்தீப் படையை கேப்டன் விஷால் பரத்வாஜ் மிகானி அண்ட் கோ எப்படி மடக்கினார்களோ அதேபோலதான் நேற்றும் இருந்தது. முதல் பத்து நிமிடம் பாட்னா பைரேட்ஸ் ஆதிக்கம் செலுத்தியது. தெலுங்கு டைட்டன்ஸ் ஆல் அவுட் ஆகும் என நினைத்திருந்த சமயத்தில் பர்தீப் நர்வால் சூப்பர் டேக்கிலில் மாட்டுகிறார். விஷால் பரத்வாஜ் மிகானி இருவரும் இந்த டேக்கிலில் தங்களது டிபண்டிங் பாயின்ட்டுக்கு பிள்ளையார் சுழி போடுகிறார்கள். ஆட்டத்தை அப்படியே தெலுங்கு டைட்டன்ஸ் பக்கம் மாற்றுகிறார்கள். அட்டகாசமான ஐடியாலஜி. பர்தீப் இந்தமுறை தடுமாற அந்தப் பக்க மெஷின் எக்ஸ்ட்ரா வேகம் எடுத்தது.

13-வது நிமிடத்தில் கோ ரெய்டர் நிலேஷ் சலூங்கி ஆடிய சூப்பர் ரெய்டில் மேட்ச் தெலுங்கு டைட்டன்ஸ் பக்கம் மாறியது. அதாவது பர்தீப் அவுட் ஆனதும் அடுத்த மூன்று நிமிடங்களில் பாட்னா பைரேட்ஸ் ஆல் அவுட். முதல் பாதியின் கடைசி ஐந்து நிமிடத்தில் விஷாலின் `சோலோ டேக்கிலில்’ மன்ஜீத் பர்தீப் மாட்டியதும், ராகுலின் ஸ்மார்ட் ரெய்டில் இருந்து பாட்னா டிபண்டர்கள் தப்பிக்க முடியாமல் இரண்டாவது ஆல் அவுட்டை நோக்கிச் சென்றது பைரேட்ஸ். முதல் பாதியின் முடிவில் 25-17 என தெலுங்கு டைட்டன்ஸ் முன்னிலை வகித்தது.

கபடி

இரு அணியும் ரெய்டில் 13 புள்ளிகள் எடுத்தன. இருந்தும் தெலுங்கு டைட்டன்ஸ் டேக்கிலில் மட்டும் 9 புள்ளிகள் எடுத்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியின் முதல் நிமிடத்தில் பாட்னா பைரேட்ஸ் இரண்டாவது முறையாக ஆல் அவுட் ஆனதால், ஆட்டம் ஒன் சைட் கேமாக மாறியது. போதாக்குறைக்கு 24-வது நிமிடத்தில் ரெய்டு வந்த பர்தீப் நர்வால் காயம் அடைந்ததால், பாட்னா பைரேட்ஸ் ரெய்டு யுனிட் செயலிழந்தது.  

28-வது நிமிடத்தில் ராகுல் சவுத்ரி சூப்பர் ரெய்டு மூலம் மிரட்ட, மூன்றாவது முறையாக பாட்னா பைரேட்ஸ் அணி ஆல் அவுட்டானது.  முடிவில் 53-32 என தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி பெற்றது. ராகுல் சவுத்ரி ரெய்டில் 17 புள்ளிகள், கேப்டன் விஷால் பரத்வாஜ் டேக்கிலில் 9 புள்ளிகள் எடுத்தது வெற்றிக்கு காரணமாக அமைந்தது.