வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (01/11/2018)

கடைசி தொடர்பு:08:30 (01/11/2018)

டாஸிலும் சாதிக்கக் காத்திருக்கும் கோலி; இன்று இறுதி ஒருநாள் ஆட்டம்! #INDvWI

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. 

இந்திய அணி

Photo Credit: Twitter/BCCI

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்று முன்னிலையில் உள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்தது. 

இந்நிலையில், இன்று திருவனந்தபுரத்தில் நடக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணிக்குக் எதிரான கடைசி ஒருநாள் போட்டி. ஏற்கெனவே இங்கு டி20 போட்டி நடைபெற்றிருந்தாலும், இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும். இந்திய அணியைப் பொறுத்த வரை, பலமான அணியாகத்தான் உள்ளது. டாப் ஆர்டர் இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் நிலைத்து நின்று ஆடி வருவதால், இந்திய அணியின் பலவீனமான நடுவரிசை இதுவரை சிக்கலாகத் தெரியவில்லை. அதனால், இந்திய அணியின் டாப் ஆர்டரை காலி செய்யும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கும். கோலி இந்தத் தொடரில் மூன்று சதங்களுடன் டாப் ஃபார்மில் இருக்கிறார். 4-வது ஒருநாள் போட்டியில் கோலி சொதப்பினாலும் ராயுடு சதம் அடித்து நம்பிக்கை அளித்தார். தோனியும் ஃபார்முக்குத் திரும்பினால், இந்திய அணிக்கு தற்போது இருக்கு ஒரே பலவீனமான நடுவரிசையும் பலமாகிவிடும்.  

கோலி

Photo Credit: Twitter/BCCI


ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து பந்துவீச்சில் மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்பட்சத்தில் கலீல் அகமது மாற்றப்பட்டு சஹால் அணியில் சேர்க்க வாய்ப்பிருக்கிறது. கலீல் கடந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்தவரை மூத்த வீரர் சாமுவேல்ஸ் இந்தத் தொடரில் சொதப்பி வருகிறார். ஆனால், ஹோப் மற்றும் ஹெட்மயர் ஆகியோர் தொடர்ந்து நம்பிக்கை அளித்து வருகின்றனர். இவர்களுடன் சாமுவேல்ஸும் சிறப்பாக விளையாடினால், இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அது தலைவலியாக அமையும். இந்திய அணியில் பேட்டிங் பலமாக உள்ளதால், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களால் இந்தத் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. 

இன்றைய போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 1 ரன் எடுக்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெறுவார். கோலி தான் விளையாடும் போட்டிகள் எல்லாவற்றிலும் ஏதாவது சாதனையை செய்துகொண்டிருக்கிறார். இன்றையை போட்டியில் டாஸில் அவர் ஒரு சாதனையைச் செய்ய வாய்ப்பிருக்கிறது. இன்றைய போட்டியின் டாஸை கோலி வென்றால் இந்தியாவில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட இருநாட்டுத் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் டாஸ் வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையும் அவர் பெறலாம். ஆனால், இதற்குத் திறமை தேவையில்லை. அதிர்ஷ்டம் தான் தேவை. 

இன்றைய போட்டி நடைபெறும் திருவனந்தபுரத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. எனினும் போட்டி பெரும்பாலும் பாதிக்கப்படாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடரை வெல்லும் முனைப்புடன் இந்தியாவும் சமன் செய்யும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதவுள்ளன. ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. மழை, ஆடுகளத்தில் இருக்கும் புல் முதலிவற்றால் இன்றைய போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.