வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (01/11/2018)

கடைசி தொடர்பு:13:35 (01/11/2018)

தோனிக்கு 1 ரன்; ரோஹித்துக்கு 27 ரன்! - சாதிப்பார்களா இவர்கள்?

இந்தியக் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 200 அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் அவரின் ரசிகர்கள் உள்ளனர்.

ரோஹித் ஷர்மா

Credits: BCCI


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டியை இந்திய அணி 2-0 என்று கைப்பற்றிய நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தத்தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவும் தொடரைச் சமன் செய்யும் நோக்கில் மேற்கிந்திய தீவுகள் அணியும் களமிறங்குகிறது. இந்தத்தொடரில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி வருகின்றனர். கோலி மூன்று போட்டிகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். ரோஹித் நான்காவது போட்டியில் 150 ரன்களுக்கு மேல் குவித்தார். இன்றைய போட்டியில் 1 ரன்கள் எடுத்தால் சர்வதேச போட்டிகளில் தோனி 10,000 ரன்களைக் கடப்பார். 
 
அதேபோல் ரோஹித் ஷர்மாவும் பல்வேறு சாதனைகளைப் படைக்கக் காத்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியல் 218 சிக்ஸர்களுடன் தோனி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரோஹித் ஷர்மா 198 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். சர்வதேச அளவில் ரோஹித் 7-வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடி (351), மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் (275), ஜெயசூர்யா (270), தோனி, டிவில்லியர்ஸ் (204) சிக்ஸர்களுடன் டாப் 5 இடங்களை பிடித்துள்ளனர். 

மேலும், இந்த ஆண்டில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் கோலிக்கு அடுத்தபடியாக உள்ளார். இந்த வருடத்தில் 18 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் 967 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 27 ரன்களை எடுத்தால் இந்த ஆண்டில் 1000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சிறப்பைப் பெறுவார். கோலி 13 ஆட்டங்களில் 1169 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.   

இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றும். அவ்வாறு நிகழ்ந்தால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக இந்திய அணி தொடர்ச்சியாக ஒரு நாள் தொடரில் பெற்ற 8-வது வெற்றியாக இது அமையும். அந்த அணி கடந்த 2006-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவை வீழ்த்தி இருந்தது.