வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (01/11/2018)

கடைசி தொடர்பு:18:00 (01/11/2018)

`அந்த நிமிஷத்தை மறக்கவே முடியாது!’ - பிரதமரை சந்தித்த ஜெனித்தா நெகிழ்ச்சி

பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெறும் ஜெனித்தா ஆண்டோ

``விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவருக்கும் சொந்த நாட்டுக்காகப் பதக்கம் வெல்லும் லட்சியக் கனவு இருக்கும். மாற்றுத்திறன்கொண்ட எனக்கும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதே லட்சியம். ஆனால், இதுவரை பாரா விளையாட்டுப் போட்டிகளில் செஸ் சேர்க்கப்படாமலேயே இருந்தது. முதன்முறையாக இந்த வருடம் செஸ் விளையாட்டை சேர்த்தபோதே, அங்கே என் திறமையை நிரூபித்துவிட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இந்தோனேசியா கிளம்பினேன். அந்த நம்பிக்கையே, இந்தியாவுக்காக 4 பதக்கங்களை வென்று தந்தது” எனப் பூரிப்புடன் பேசுகிறார் ஜெனித்தா ஆண்டோ. 

கடந்த மாதம், இந்தோனேசியா நாட்டின் ஜெகர்தா நகரில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், திருச்சியைச் சேர்ந்த ஜெனித்தா ஆண்டோ, ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களைப் பெற்றுத் திரும்பியிருக்கிறார்.

“இந்தியா சார்பாக, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில 198 பேர் கலந்துக்கிட்டாங்க. செஸ் போட்டியைப் பொறுத்தவரை, அக்டோபர் 7 முதல் 10 வரை நடந்த ஸ்டாண்டர்டு பிரிவில், சில்வர் வின் பண்ணினேன். ஆனால், இரண்டாம் இடம் வந்ததில் விருப்பமே இல்லை. என் ஒரே எண்ணம், இந்திய தேசியக்கொடியைப் பறக்கவிட்டு, தேசியகீதம் ஒலிக்கிற சத்தத்தைக் கேட்கணும்ங்கிறதுதான். அந்த எண்ணம் ஒரு புது உத்வேகத்தைக் கொடுத்துச்சு. அடுத்த நாள் ஆரம்பிச்ச ராப்பிட் பிரிவில் முதல் இடத்தைப் பிடிச்சேன். எதிர்பார்த்த மாதிரியே இந்தியக் கொடியை பறக்கவிட்டு தேசியகீதத்தை ஒலிக்கவிட்டப்போ, எனக்குள்ள எழுந்த உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

ஜெனித்தா ஆண்டோ

அதுமட்டுமில்லே, இந்தியா திரும்பியதும் நான் எதிர்பார்க்காத ஒரு விஷயமும் நடந்துச்சு. வெற்றிபெற்றவங்க எல்லோரையும் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறதா தகவல் வந்துச்சு. நான் பிரதமரைப் பார்த்த அந்த நிமிஷம், ரொம்பப் பெருமையா உணர்ந்தேன். அங்கே போயிருந்தவங்களில் நான் மட்டும்தான் 4 பதக்கங்களை ஜெயிச்சிருந்தேன். அதைப் பார்த்துட்டு, 'ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்த்துகள்' என்று ஹிந்தியில் சொன்னார். அந்த நிமிஷத்தை என் வாழ்க்கையில மறக்கவே முடியாது” என்கிறார் ஜெனித்தா ஆண்டோ பெருமிதக் குரலில்!