வெளியிடப்பட்ட நேரம்: 17:12 (01/11/2018)

கடைசி தொடர்பு:17:53 (01/11/2018)

191 பந்துகளில் 132 டாட் பால்கள்... வெஸ்ட் இண்டீஸ் இஸ் பேக்! #INDvWI

இந்திய அணி பலமடைந்துவிட்டதோ என்று பார்த்தால்... `நாங்க நாங்களா விளையாடியிருக்கோம்' என்று சொல்லியிருக்கிறது `தட் டி-20 மட்டுமே ஆடத் தெரிந்த' வெஸ்ட் இண்டீஸ் அணி.

191 பந்துகளில் 132 டாட் பால்கள்... வெஸ்ட் இண்டீஸ் இஸ் பேக்! #INDvWI

மூன்றாவது போட்டியில் தோற்றதும், மிடில் ஆர்டர் பலவீனமாக இருக்கிறது, ஆறாவது பௌலிங் ஆப்ஷன் இல்லை என்று கேதர் ஜாதவை மீண்டும் அழைத்தது இந்திய அணி. பாவம், வந்தவருக்கு இரண்டு போட்டிகளாக ஒரு வேலையும் இல்லை. நான்காவது போட்டியில் 7 பந்துகள் பேட்டிங் பிடித்தவர், ஒரு பந்துகூட வீசவில்லை. சரி, இன்றாவது அவருக்கு ஏதாவது வேலை இருக்கும் என்று பார்த்தால் 104 ரன்களுக்கு மூட்டையைக் கட்டிவிட்டது வெஸ்ட் இண்டீஸ். இன்றும் இவர் பந்துவீசவில்லை. இந்த டார்கெட் ரோஹித்துக்கும், கோலிக்குமே போதவில்லை. பேட்டிங்கும் பிடிக்க வாய்ப்பில்லை பாவம். 

இதற்கு இந்திய அணி பலமடைந்துவிட்டதுதான் காரணமா என்று பார்த்தால்... `நாங்க நாங்களா விளையாடியிருக்கோம்' என்று சொல்லியிருக்கிறது `தட் டி-20 மட்டுமே ஆடத் தெரிந்த' வெஸ்ட் இண்டீஸ் அணி. ஒரு வாரம் தாங்கள் யார் என்பதை மறந்து விளையாடிக்கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், மீண்டும் `வெஸ்ட் இண்டீஸ்' வீரர்களாக விளையாடத் தொடங்கியுள்ளார்கள். 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்

106, 94, 37, 13, 9 - இந்த 5 போட்டிகளில் ஷெம்ரான் ஹிட்மேயர் அடித்த ஸ்கோர் இது. அப்படியே இறங்கு வரிசை நம்பர்களாக இருக்கிறதா? இவரது ஸ்கோரையே வெஸ்ட் இண்டீஸ் அணியின் பெர்ஃபாமன்ஸ் சார்ட்டாகவும் எடுத்துக்கொள்ளலாம். நான்காவது போட்டியில் கொஞ்சம் சறுக்கியவர்கள், இந்த முறை வெறும் 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளனர். எப்படி இந்த இரண்டு போட்டிகளிலும் அவர்கள் சறுக்கினார்கள்? 

முதல் 3 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் ஆடியதற்கும், இந்த இரண்டு ஆட்டங்கள் அவர்கள் தடுமாறுவதற்கும் காரணம் ஷாய் ஹோப் ஆடிய ஆட்டம்தான். இரண்டாவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 123 ரன்கள் எடுத்து ஆட்டத்தை `டை' ஆக்கினார். மூன்றாவது போட்டியில் 95 ரன்கள் எடுத்து பெரிய இலக்கை நிர்ணயிக்க உதவினார். முதல் போட்டியில் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை என்றாலும், 86-3 என்ற ஸ்கோரிலிருந்த அணியைக் கரைசேர்த்ததும், ஹிட்மேயர் அடித்து ஆட நம்பிக்கை தந்ததும், ஹோப் ஆடிய `ஆங்கர்' ரோல்தான். அவர் டக் அவுட் ஆன இந்த இரண்டு ஆட்டங்களும் மொத்தமாகச் சொதப்பியிருக்கிறார்கள் மற்ற பேட்ஸ்மேன்கள். 

ஷாய் ஹோப்

டி-20 நினைப்பில் தூக்கித் தூக்கி அடித்துக்கொண்டே இருந்தால் 50 ஓவர்கள் ஆடுவது எப்படி. டிஃபன்ஸ் என்ற கிரிக்கெட்டின் அடிப்படையைப் பயன்படுத்துவதே கிடையாது. முதல் ஓவரின் முதல் பந்தையே ஸ்லாக் செய்ய முற்படுகிறார் கீரன் பவல். LBW அப்பீல். அவுட் இல்லைதான். ஆனால், முதல் பந்திலேயே ஏன் அப்படி ஆடவேண்டும். இரண்டாவது பந்து லெக் சைடில் வைட். அதையும் கூட அடிக்க முற்பட்டார் .மீண்டும் இரண்டாவது பந்து - ஸ்டம்ப் லைனில்தான் வருகிறது. சுத்துகிறார். படவில்லை. மூன்றாவது பந்து வெளியே. வேகமாக கட் ஷாட் ஆடுகிறார். ஃபீல்டர் இருந்ததால் டாட் பால். நான்காவது பந்து... வெளியே நகர்ந்து சென்ற பந்தை அடிக்க, எட்ஜாகி தோனியிடம் கேட்சாகிறார். நான்கு பந்துகளில் ஒரு முறை கூட டிஃபன்ஸ் ஆட நினைக்கவில்லை. ஸ்லாக்... ஸ்லாக்... ஸ்லாக் தான். வெஸ்ட் இண்டீஸ் வீழ்ச்சியைத் தொடங்கிவிட்டு வெளியேறினார். 

அவர் மட்டுமல்ல, ஹோப், ஹோல்டர் தவிர்த்து அத்தனை வீரர்களும் அப்படித்தான். இந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் சராசரியைப் பார்த்தாலே தெரிந்துவிடும். ஹோப் (62.5), ஹிட்மேயர் (51.80), ஹோல்டர் (40.25) மட்டுமே 40-க்கும் அதிகமான சராசரி வைத்துள்ளனர். மற்ற பேட்ஸ்மேன்களின் சராசரி 20-க்கும் குறைவு. அதிலும் ஹிட்மேயர் இரண்டு நல்ல இன்னிங்ஸ்களினால் தப்பித்துவிட்டார். ஹோப், ஹோல்டர் தவிர்த்து இன்னிங்ஸைக் கட்டமைக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு யாருமே விளையாடவில்லை. 35 ஓவர்கள் இருக்கும்போதும் ஒவ்வொரு பந்தையும் விடாமல் தூக்கிக்கொண்டிருக்கிறது ரொவமேன் பவல் - ஹிட்மேயர் ஜோடி. மிட்விக்கெட், கவர், லாங் ஆன் என ஒவ்வொரு ஏரியாவிலும் ஃபீல்டருக்குப் பின்னால் பந்து விழுந்ததால் பலமுறை தப்பித்தனர். 200 பந்துகள் இருக்கும்போது இப்படியான சூழ்நிலையில் ஏன் அடித்து ஆடவேண்டும்? 

#INDvWI

ஹோப், ஹிட்மேயர், தாமஸ் தவிர்த்து மற்ற அனைத்து விக்கெட்டுகளுமே கேட்ச். ரோவ்மேன் பவல் - டீப் ஸ்கொயர் லெக்; ஆலன் - டீப் ஃபைன் லெக்; ரோச் - லாங் ஆஃப். கீமோ பால், சாமுவேல்ஸ், ஹோல்டர் - எட்ஜ். இப்படி எல்லாமே டி-20 ஷாட்களால் விழுந்து விக்கெட்டுகள். 18 ஆண்டுகளாக விளையாடிவரும் சாமுவேல்ஸ் கூட அதே மனநிலையில் விளையாடுவதுதான் கொடுமை. சரி, சிங்கிளாவது எடுக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. விளையாடிய 191 பந்துகளில் 132 டாட் பால்கள். 5 மெய்டன் ஓவர்கள் வேறு. `அடித்தால் பௌண்டரி, சிக்ஸர்தான்' என்ற மனநிலையிலேயே விளையாடினால் இப்படித்தான். ஏதோ, முதல் 3 ஆட்டங்கள் ஹோப் ஆடிய ஒழுங்கான ஆட்டமும், ஹிட்மேயரின் இரண்டு அதிர்ஷ்ட இன்னிங்ஸ்களும் காப்பாற்றியது. இப்போது வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் பழைய கத்துக்குட்டியாகவே வந்துள்ளது!

நவம்பர் மாத ஸ்போர்ட்ஸ் விகடன் இதழை டவுன்லோடு செய்ய http://bit.ly/SPORTSVIKATAN3


டிரெண்டிங் @ விகடன்