வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (01/11/2018)

கடைசி தொடர்பு:17:25 (01/11/2018)

`சொந்த மண்ணில் இந்த விருதைப் பெற்றதில் மகிழ்ச்சி!’ - 'ஹால் ஆஃப் ஃபேம்' குஷியில் டிராவிட்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ஐ.சி.சி-யின் 'ஹால் ஆஃப் ஃபேம்' விருது பெற்றுள்ளார். 

ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கெட்டின் `இரும்புக்கோட்டை', `சுவர்' என்று வர்ணிக்கப்படுபவர் ராகுல் டிராவிட். டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,288 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல, 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 10,889 குவித்துள்ளார். 1996-ம் ஆண்டு, சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த டிராவிட், கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியதுடன், பல போட்டிகளில் தனது முத்திரையைப் பதித்துள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னும் இந்திய அணிக்காக உழைத்து வருகிறார். அந்தவகையில், இந்திய இளையோர் அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டுவருகிறார். இவரது தலைமையின் கீழ் இந்த ஆண்டு இளையோர் அணி உலகக் கோப்பைக் கைப்பற்றியது. 

இவரின் சாதனையை போற்றும் வகையில் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இவருக்கு `ஹால் ஆஃப் ஃபேம்' விருது அறிவித்தது. கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் 'ஹால் ஆஃப் ஃபேம்' வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு டிராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் 'ஹால் ஆஃப் ஃபேம்' விருதைத் தட்டிச்செல்லும் ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை டிராவிட் பெற்றுள்ளார். இதற்கு முன்பாக சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பேடி மற்றும் கபில்தேவ், கும்ப்ளே ஆகியோர் இந்த சிறப்பைப் பெற்றுள்ளனர். 

இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 5வது ஒருநாள் போட்டியின்போது டிராவிட்டுக்கு `ஹால் ஆஃப் ஃபேம்' விருதை சுனில் கவாஸ்கர் வழங்கினார். விருது பெற்ற பின் பேசிய டிராவிட், ``ஐசிசி விருதைச் சொந்த மண்ணில் பெறுவதற்குப் பெருமை அடைகிறேன். இந்திய கிரிக்கெட்டின் வெற்றிக்கு நானும் பங்களித்திருக்கிறேன் என்ற திருப்தியை இந்த விருது அளிக்கிறது. நான் விளையாடும் நாள்களில் எனக்கு நிறைய உதவியும் ஆதரவும் கிடைத்தது, நீண்ட பயணத்தில் எனக்கு வழிகாட்டிய பயிற்சியாளர்களுக்கும் என் சமகாலத்தவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களோடு இருந்த ஒவ்வொரு தருணத்தையும் நான் அனுபவித்திருக்கிறேன். ஒன்றாக இணைந்து நாங்கள் பெரிய இலக்குகளை அமைக்கவில்லை. ஆனால் பெரும்பான்மையானவற்றை அடைந்தோம்" என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க