வெளியிடப்பட்ட நேரம்: 17:08 (01/11/2018)

கடைசி தொடர்பு:17:21 (01/11/2018)

வெஸ்ட் இண்டீஸுக்கு 32.... இந்தியாவுக்கு 15... மூன்றரை மணி நேரத்தில் முடிந்த ஒருநாள் போட்டி!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

ரோஹித்


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் 2-0 என்ற நிலையில், இந்தியா தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்து வந்தநிலையில் வெற்றியை தீர்னமானிக்கும் இறுதி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணிக்கு கிரண் பவல், ரோவ்மண் பவல் இணை தொடக்கம் கொடுத்தது. களமிறங்கிய 4-வது பந்திலே, கிரண் பவலை, புவனேஷ்குமார் வெளியேற்றினார். முதல் ஓவர் முடிவிலே அந்த அணி 1-1 என்ற கணக்கில் மோசமான ஆட்டத்தைத் தொடங்கியது.

ரோஹித்


அடுத்த களமிறங்கிய ஹோப் 2 வது ஓவரிலேயே பும்ராவால் வெளியேற்றப்பட்டார். முந்தைய ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரும் நம்பிக்கை அளிந்த வந்த ஹோப், கடந்த இரண்டு ஆட்டங்களிலும் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக சாமுவேல்ஸ் களமிறங்க, நிதானமான ஆட்டம் வெளிப்பட்டது. ஆனால், அது 11 வது ஓவர் வரைக்கூட நிலைக்கவில்லை. சாமுவேல்ஸை ஜடேஜா அவுட் செய்தார். தொடர்ந்து தள்ளாடிய அந்த அணிக்கு பலம் சேர்க்க யாரும் முன்வராத நிலையில் 31-வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்களை மட்டுமே சேர்த்தது. 105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தவான் மற்றும் ரோஹித் தொடக்கம் கொடுத்தனர். முதல் ஓவரின் 5வது பந்தில் தவானின் விக்கெட்டை தாமஸ் வீழ்த்தினார். ரசிகர்களுக்கு அதிருப்தியை அளிக்கும் வகையில் இந்திய அணி தொடக்கம் கொடுத்தாலும், கோலி- ரோஹித் இணை ரசிகர்களுக்கு புது உற்சாகத்தை அளித்தது. மேலும், கோப்பையை கைப்பற்ற அணிக்கு இந்த ஜோடியே போதுமானதாக இருந்தது. 104 ரன்களை எடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 31 ஓவர் தேவைப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு வெறும் 15 ஓவர் மட்டுமே தேவையானதாக இருந்தது.

இந்த ஆட்டத்தின் மூலம் ரோஹித் இரண்டு புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி,  இந்த ஆண்டில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் கோலிக்கு அடுத்தபடியாக இணைந்துள்ளார் ரோஹித். 18 போட்டிகளில் விளையாடிய ரோஹித் 1,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். மேலும் இரண்டு சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் 200 சிக்ஸர்களை நிறைவு செய்துள்ளார். இந்த பட்டியலில் அவர் 8-வது இடத்தில் உள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.